ஹரியானாவில் 350 கிலோ வெடிபொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் கார் குண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி உள்ள காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு - தவெக தலைவர் இரங்கல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குண்டு வெடித்த காரின் விவரம்
குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஹரியானா பதிவு எண்ணை கொண்டது. ஹரியானவை சேர்ந்த தனி நபருக்கு சொந்தமான வாகனம் என டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
”குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில்..”
“இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டு வெடித்தது. விரைவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிடுகிறேன்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் இன்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை உயர்வு
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டெல்லி குண்டுவெடிப்பு - ராகுல் காந்தி இரங்கல்!
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் வெடிப்பு நிகழ்ந்த செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் துணை நிற்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற விழைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
டெல்லி குண்டுவெடிப்பில் நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டை அருகே மெதுவாக சென்ற காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. அம்மோனியம் நைட்ரேட் இருக்கிறதா என தடவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டு வருவதாக டெல்லி காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களிலும் ரோந்து பணிகள், தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் உஷார் நிலை
டெல்லியில் கார் குண்டு வெடித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தி உள்ளனர். தமிழக எல்லைகள், சோதனை சாவடிகளில் வாகன சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி, சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சென்னையில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட கார் பாகங்கள்
டெல்லி செங்கோட்டை அருகே குண்டு வெடித்ததில் கார் பாகங்கள் 300 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
தகவலை கேட்டறிந்த அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் உள்துறை அமைச்சர் அமிஷ் ஷா தகவலை கேட்டறிந்துள்ளார். நாடு முழுவதும் பாதுகாப்பை உஷார்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த NIA
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) வந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உஷார் நிலை
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே கார் வெடி விபத்தை அடுத்து சென்னையில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தவும், சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிக்க ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ரெட் அலர்ட்
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே குண்டுவெடிப்பை அடுத்து உத்தரப் பிரதேசம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய உத்தரப் பிரதேச சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ், பதட்டமான மத இடங்கள், பதட்டமான மாவட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் டிஜிபி அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.
3 முறை கேட்ட வெடி சத்தம்
“இதுபோன்ற வெடி சத்தத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டதே இல்லை. மூன்று முறை வெடி சத்தம் கேட்டதை நான் உணர்ந்தேன். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் மரணிக்க போகிறோம் என்றே நினைத்தேன்” டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்தவர் தகவல்.
டெல்லி சம்பவம் சதியா? விபத்தா?
தற்போது வரை இந்த வெடிவிபத்து திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், ஹரியானா மாநிலத்தில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், ஏழு பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு - அதிகரிக்கும் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் வரை பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம என அஞ்சப்படுகிறது.