வான்வெளி தாக்குதல்.. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 உட்பட 10 பேர் பலி
18 Oct,2025
பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் உர்குன் மாவட்டத்தில், பாகிஸ்தான் திடீரென வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரோன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் 7 பொதுமக்கள் உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள், உள்ளூரில் நடந்த போட்டிக்கு பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.