பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!
10 Oct,2025
பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படுவதாக கூறியது.
அத்துடன் கிழக்கு, தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு எச்சரித்தது.
இதேவேளை, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு 1-3 மீட்டர் உயர அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், இந்தோனேசியாவின் சில கடற்கரைகள், பலாவ் தீவு நாடிலும் 30 செ.மீ முதல் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தது.
பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 25,000 மைல் (40,000 கிலோமீட்டர்) நில அதிர்வுப் பிளவுக் கோடுகளின் நெருப்பு வளையத்தின் அருகே அமைந்துள்ளது.
இது உலகின் பாதிக்கும் மேற்பட்ட எரிமலைகளைக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றது.