பாகிஸ்தானில் தொடர் மழை, வெள்ளத்தால் 275 சிறுவர்கள் பலி : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000தை கடந்தது!
02 Oct,2025
பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர்.
வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 321 குழந்தைகள், 450 ஆண்கள் மற்றும் 292 பெண்கள் அடங்குவர். பஞ்சாப் மாகாணத்தில் அதிகபட்சமாக 661 பேர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், சேதத்தின் அளவை மதிப்பிடவும் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
இந்த வெள்ளப் பாதிப்பின் தொடர்ச்சியாக, நாட்டில் பணவீக்கம் தற்காலிக அடிப்படையில் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த இயற்கை சீற்றம் பாகிஸ்தானில் பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.