மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான சூழலே நிலவி வருகிறது. குறிப்பாகக் கடந்த சில மாதங்களாக காசாவில் இஸ்ரேல் மிகத் தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்கு மிக மோசமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா 21 பாயிண்டுகளை கொண்டு ஒரு விரிவான திட்டத்தை முன்மொழிந்துள்ளது. காசாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடரும் நிலையில், பாலஸ்தீன மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையே காசாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த 21 பாயிண்டுகளை கொண்ட விரிவான ஒரு திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. விரிவான திட்டம்
1. காசா பகுதி தீவிரவாதம் இல்லாத, அண்டை நாடுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத ஒரு அமைதியான மண்டலமாக மாற்றப்படும். 2. காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். 3. இரு தரப்பும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தி, காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கும். 4. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்திற்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்துப் பணயக்கைதிகளும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். விடுவிப்பு 5. அதன் பிறகு, இஸ்ரேலில் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாலஸ்தீனிய பாதுகாப்பு கைதிகள் பல நூறு பேர் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், போர் தொடங்கிய பிறகு கைது செய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட காசா மக்கள், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
6. பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, அமைதியாக வாழ ஒப்புக்கொள்ளும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். அங்கிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு, விருப்பமுள்ள நாடுகள் பாதுகாப்பான பயண வசதியும் ஏற்படுத்தித் தரப்படும். 7. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கும். தினசரி 600 லாரிகள் அளவுக்கு மனிதாபிமான உதவிகள் காசாவுக்கு வரும். மேலும், உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் இடிபாடுகளை அகற்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 8. உதவிப் பொருட்கள் விநியோகம் என்பது முழுக்க முழுக்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளால் மட்டுமே நிர்வகிக்கப்படும். இதில் எந்த ஒரு தரப்பினரின் தலையீடும் இருக்காது.
இடைக்கால நிர்வாகம் 9. பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழுவைக் கொண்டு காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். அந்த அமைப்பே காசாவில் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கும். அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும். பாலஸ்தீனிய ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இக்குழுவின் பணியாகும். 10. காசாவை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு விரிவான பொருளாதாரத் திட்டம் தொடங்கப்படும். இது நகர வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். 11. ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். இதில் பங்கேற்கும் நாடுகளிடம் குறைந்த வரி வசூலிக்கப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.
12. காசாவை விட்டு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். வெளியேற விரும்பும் மக்களும் கூட எப்போது வேண்டுமானாலும் காசாவுக்கு திரும்பலாம்.. காசா மக்கள் அங்கேயே தங்கவே ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதற்கு என்ன அர்த்தம்? இதனால் காசா போர் முடிவுக்கு வருமா? ஹமாஸ் மீது நடவடிக்கை? 13. காசாவின் நிர்வாகத்திலிருந்து ஹமாஸ் விலக்கப்படும். சுரங்கங்கள் உட்பட அனைத்துத் தாக்குதல் ராணுவ கட்டமைப்புகளும் அகற்றப்படும். புதிய தலைமை அண்டை நாடுகளுடன் சுமுக உறவைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்படும்.
14. ஹமாஸ் உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் மீண்டும் வன்முறைக்குச் செல்லாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் இஸ்ரேல் மற்றும் காசா மக்கள் இருவரும் பாதுகாக்கப்படுவார்கள். 15. அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து, காசாவில் ஒரு தற்காலிகப் படையைக் களமிறக்கும்.. இந்தப் படை காசாவில் பாதுகாப்பைக் கண்காணிக்கும். மேலும், உள்ளூர் போலீசாருக்கும் தேவையான பயிற்சியைக் கொடுக்கும். காசாவில் இஸ்ரேல் 16. காசாவை இஸ்ரேல் இணைக்கவோ அல்லது நிரந்தரமாக ஆக்கிரமிக்கவோ செய்யாது. அங்குப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன் இஸ்ரேலின் படைகள் படிப்படியாக விலகிக் கொள்ளப்படும்.
17. ஹமாஸ் இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், இந்த நடவடிக்கைகள் முதற்கட்டமாகத் தீவிரவாத செயல்பாடு இல்லாத பகுதிகளில் செயல்படுத்தப்படும். சர்வதேச படைகள் வசம் கட்டுப்பாடுகள் ஒப்படைக்கப்படும். 18. எதிர்காலத்தில் கத்தார் மீது எந்தவிதமான தாக்குதல்களையும் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளிக்கிறது. மேலும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் இருக்கும் கத்தாரின் முக்கிய பங்கை அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கின்றன.
அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை 19. இஸ்ரேலியர்களுக்கும் காசா மக்களுக்கும் இடையே பரஸ்பர புரிதலை வளர்க்கும் வகையில், பல்வேறு மதங்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பு இரு தரப்பிற்கும் இடையே புரியலை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கும். 20. காசாவில் மறுசீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் பாலஸ்தீனிய அரசு உருவாகும் சூழல் ஏற்படும். (அதேநேரம் சீர்திருத்த நடவடிக்கைகள் எப்போது முடியும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை) 21. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதியான சூழலை உருவாக்கப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். அமெரிக்கா இந்தப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கும்.