காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 4 பத்திரிகையாளர் உட்பட 19 பேர் பலி
26 Aug,2025
டெய்ர் அல் பலாஹ்: காசாவின் பிரதான மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். தெற்கு காசாவில் கான் யூனிசில் உள்ள மருத்துவமனை காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. முதலில் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது. கட்டிடத்தின் நான்காவது தளத்தில் நடந்த தாக்குதலை அடுத்து அங்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அப்போது மற்றொரு முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 4 பத்திரிகையாளர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்தனர். இவர்களில் காசா போர் தொடங்கியதில் இருந்து அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி நிறுவனங்களுக்காக ப்ரிலான்சராக பணிபுரிந்த மரியம் டாக்காவும் ஒருவர். அல் ஜசீராவை சேர்ந்த பத்திரிகையாளர் முகமது சலாம் மற்றும் ராய்ட்டர்சின் ஒப்பந்த கேமராமேன் ஹுசாம் அல் மஸ்ரியும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். 22 மாத போரில் குறைந்தது 192 பத்திரிகையாளர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 22 மாதமாக நடந்து வரும் போரின் இந்த மருத்துவமனை ஏராளமான தாக்குதல்கள் மற்றும் குண்டு வீச்சுகளையும் தாங்கி நிற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவமனையில் பொருட்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அசாதாரணமானது அல்ல. காசா பகுதி முழுவதும் ஏராளமான மருத்துவமனைகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டுள்ளன.