காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு... 38 பேர் உயிரிழந்த அதிர்ச்சி!
29 Jul,2025
பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த ரத்தவெறிப்பிடித்த கொடூரத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கோவில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எப்படி?
கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இரவுத் திருப்பலியில் பங்கேற்றிருந்தனர். அப்போது அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவாலயத்திற்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர்.
பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த ரத்தவெறிப்பிடித்த கொடூரத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், பலர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்ட ADF கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் கோமண்டாவிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து வந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கிழக்கு காங்கோ, சமீபத்திய ஆண்டுகளில் ஏடிஎஃப் மற்றும் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களால் கொடிய தாக்குதல்களைச் சந்தித்து வரும் சூழலில், இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.