துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு.
25 Jul,2025
துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
தற்போது மத்திய மற்றும் மேற்கு துருக்கியின் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகப் பரவி வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையும், தீயணைப்புத் துறையும் முழு அளவில் ஈடுபட்டுள்ளன.
அரசாங்கம், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்த்தும் வருகின்றனர்.
துருக்கியில் இவ்வாறான காட்டுத் தீயால் ஏற்பட்ட பெரிய உயிரிழப்பு இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டுகளிலும் வறட்சியான காலநிலை, கடும் காற்று, மற்றும் காடுகளில் கருகி விழும் விறகு போன்ற காரணங்களால் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.