அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை..
25 Jul,2025
தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் உள்ள சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மகாணமும் இருநாடுளின் எல்லையில் அமைந்துள்ளது.
இருநாடுகளின் எல்லையில் தாய்லாந்தின் சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா முயென் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. Also Read "பாக்கியலட்சுமி: நியூஸில் இனியா சொன்ன விஷயம்.. ஆடிப்போன சுதாகர்! கதறி அழுத பாக்யா, கோபி எடுத்த முடிவு!" இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இருநாடுகள் இடையேயான பிரச்சனை பெரிதாக தொடங்கியது. எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதற்கிடையே தான் கம்போடியாவில் உள்ள தாய்லாந்து தூதரக அதிகாரிகள், மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டது. இது போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே இன்று காலையில் மோதல் ஏற்பட்டது. இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களும் மாறி மாறி தாக்கி கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தாய்லாந்தில் இருந்து பீரங்கி மூலம் கம்போடியாவின் ராணுவ நிலைகளை நோக்கி பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருநாடுகளை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. இதுதொடர்பாக கம்போடியாவின் வெளியுறவுறத்துறை சார்பில்,
‛‛தாய்லாந்து வீரர்கள் முதலில் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது. மாறாக தாய்லாந்து ராணுவம் தரப்பில், ‛‛6 கம்போடியா வீரர்கள் ஆயதங்களுடன் நுழைந்தனர். மேலும் ட்ரோன் தாக்குதல் சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றம் காரணமாக இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளன. அதுமட்டுமின்றி தாய்லாந்து தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை கம்போடியாவும், கம்போடியாவில் உள்ள தாய்லாந்து தூதரக அதிகாரிகள், மக்களை வெளியேற்ற இருநாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் தாய்லாந்து - கம்போடியா இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.