பாக்.கில் ராணுவ கான்வாயில் மனித வெடிகுண்டு தாக்குதல்; 16 பேர் பலி
29 Jun,2025
பாகிஸ்தானில் ராணுவ வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் காடி பகுதியில் நேற்று அதிகாலை ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. இந்த வாகனங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு மோதி இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் பொதுமக்களில் 14 பேர் உட்பட 24 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ நடமாட்டம் காரணமாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஹபீஸ் குல் பகதூர் குழுவின் துணைப் பிரிவான உசுத் அல் ஹர்ப் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.