தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல்; சிரியாவில் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி:
23 Jun,2025
சிரியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் கடந்த 13 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் கடந்த டிசம்பரில் பஷார் அல்-அசாத் தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்ததுடன் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பான ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
ஆனால், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அல்-அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னர் உருவான பாதுகாப்பு வெற்றிடத்தைப் பயன்படுத்தி, ஆயுதங்களை கைப்பற்றி, தாக்குதல்களை திட்டமிடத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாத அறிக்கையின்படி, சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ்-க்கு 1,500 முதல் 3,000 போராளிகள் உள்ளனர்; இவர்களில் 300 பேர் மத்திய பாடியா பாலைவனத்தில் வெளிநாட்டு தாக்குதல்களை திட்டமிடுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை, டமாஸ்கஸின் டுவைலா பகுதியில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் புனித எலியாஸ் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.
சிரிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவன் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த மக்களை துப்பாக்கியால் சுட்டான்; பின்னர் வெடிகுண்டு கவசத்தை வெடிக்கச் செய்தான். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்; 63 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தேவாலயத்தின் உள்ளே உள்ள பீடம், இருக்கைகள் மற்றும் சுவர்கள் ரத்தம் மற்றும் கண்ணாடி துண்டுகளால் சேதமடைந்தன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சிரியா அரசு இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுவொரு கோழைத்தனமான தீவிரவாதச் செயல் என்றும், நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து, டமாஸ்கஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், நாட்டில் மீண்டும் மதரீதியான பதற்றத்தை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.