இஸ்ரேல் நடத்திய அதிரடி வான்வழி தாக்குதலில் ஈரானின் அணுசக்தி மையம் தகர்க்கப்பட்டுள்ளது. ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதற்கு பதிலடியாக இஸ்பஹான் அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் 2வது முறையாக தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. மேலும் ஈரான் ராணுவ டிரோன் படைப்பிரிவு தளபதி உட்பட 3 ராணுவ தளபதிகள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து 9வது நாளாக ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது.
ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இப்போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்குவது குறித்து இன்னும் 2 வாரத்தில் முடிவு செய்யப்படும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 9வது நாளாக ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நேற்றும் நீடித்தது. இதில், நேற்று முன்தினம் நள்ளிரவு இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா நகரங்களை நோக்கி ஈரான் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஏராளமான டிரோன்களும் அனுப்பப்பட்டது. இதில் பெரும்பாலான டிரோன்களை இஸ்ரேல் ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வானிலேயே தகர்த்தது. எனினும் சில ஏவுகணைகளும், டிரோன்களும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்துச் சிதறின. இதில், வடக்கு இஸ்ரேலில் 2 மாடி கட்டிடம் சேதமடைந்தது. ஆனாலும், எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என இஸ்மேலின் மேகன் டேவிட் அடோம் மீட்பு சேவை குழுவினர் தெரிவித்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக, நேற்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானின் இஸ்பஹான் அணு ஆராய்ச்சி நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய அணுசக்தி மையங்களை 24 மணி ரேத்தில் அழிக்க வேண்டுமென இஸ்ரேல் கடந்த 13ம் தேதி திட்டமிட்டது. அந்த சமயத்தில், இஸ்பஹான் நகரில் மலைக்கு அருகே உள்ள இந்த அணுசக்தி மையம் மீது குண்டுவீசப்பட்டது.
அப்போதே கடும் சேதத்தை சந்தித்த நிலையில், தற்போது 2வது முறையாக இஸ்பஹான் அணுசக்தி மையம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்த அணு மையம் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும், அப்பகுதியில் பெரும் புகை எழுந்து வருவதாகவும் இஸ்பஹான் மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் அக்பர் சலேஹி உறுதிபடுத்தி உள்ளார். ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி தென்மேற்கு ஈரானில் உள்ள ராணுவ தளத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஈரானின் 9 முக்கிய அணு விஞ்ஞானிகள், பல ராணுவ தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில், எஞ்சிய முக்கிய நபர்களையும் இஸ்ரேல் குறிவைத்து கொல்கிறது. அந்த வரிசையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானின் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் முக்கிய அணு விஞ்ஞானிகளில் ஒருவரான தபதபாய் காம்ஷே அவரது மனைவியுடன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று உறுதி செய்துள்ளது. இதுதவிர, ஈரானுக்கு வெளியே ராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை கவனிக்கும் ஈரானிய குட்ஸ் படையின் பாலஸ்தீன படைப்பிரிவு தளபதி சயீத் இசாதி, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாசுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பொறுப்பான குட்ஸ் படையின் ஆயுத பரிமாற்றப் பிரிவின் தளபதி பெஹ்னம் ஷஹ்ரியாரி, ஈரான் டிரோன் படையின் தளபதி அமீன் போர் ஜோத்கி ஆகியோர் நேற்று முன்தினம் ஒரே இரவில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். டிரோன் படைப்பிரிவு தளபதி அமீனின் இழப்பு, ஈரானின் டிரோன் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு மையங்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவ பணியாளர்கள், ஏர் ஆம்புலன்ஸ்கள் ஆகியவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக ஈரான் சுகாதார அமைச்சர் முகமதரேசா ஜபர்கான்டி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐரோப்பிய அமைச்சர்களுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈரானில் இருந்து அனைத்து இந்தியர்கள் வெளியேற்றம்
இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக திருப்பி அழைத்து வர இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை எடுத்தது. முதலில் மாணவர்கள் உட்பட 110 இந்தியர்கள் கடந்த வியாழக்கிழமை டெல்லி அழைத்து வரப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மேலும் 290 பேர் டெல்லி வந்தடைந்தனர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் படிக்க சென்ற மாணவர்கள், யாத்ரீகர்கள் உட்பட 517 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஈரானில் இருந்து அனைத்து இந்தியர்களும் பத்திரமாக வெளியேறி விட்டதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி நேபாளம், இலங்கையை சேர்ந்தவர்களும் வெளியேற இந்தியா உதவி உள்ளது. அந்நாட்டு அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த உதவி செய்யப்பட்டுள்ளது.
அணுகுண்டு சோதனையால் ஈரானில் நிலஅதிர்வு ஏற்பட்டதா?
ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள செம்னன் நகரில் நேற்று முன்தினம் இரவு 9.19 மணிக்கு 5.1 புள்ளி ரிக்டர் அளவிலான மிதமான நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் எந்த உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என ஈரான் அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், ஈரான் அணுகுண்டு சோதனை செய்ததால் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதா எனவும் உலக அளவில் சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மறுத்துள்ளது. நில அதிர்வுகள் இயற்கையானவை என்றும், குண்டுவெடிப்பால் அவற்றை ஏற்படுவது சாத்தியமற்றது என்றும் கூறி உள்ளது.
போர்டோ அணுசக்தி மையத்தை இஸ்ரேல் தகர்க்க முடியாதது ஏன்?
இஸ்பஹான் அணுசக்தி மையத்தை தகர்த்தாலும் கூட, அணுகுண்டு தயாரிக்க வேண்டுமென ஈரான் நினைத்தால், இஸ்ரேலால் தடுக்க முடியாது. அதற்கு காரணம், ஈரானின் சக்திவாய்ந்த போர்டோ அணுசக்தி மையம்தான். ஈரானின் அணுசக்தி திட்டத்தில் முக்கியமான அணு ஆராய்ச்சி நிலையங்களாக நடான்ஸ், போர்டோ ஆகியவை உள்ளன. இதில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடும் சேதமடைந்துள்ளது. அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் போர்டோ அணுசக்தி நிலையத்தை இஸ்ரேலால் கை வைக்க முடியவில்லை. காரணம், இந்த அணு நிலையம் மலையை குடைந்து பல அடிக்கு கீழே சுரங்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஈரானிடம் மொத்தமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து இந்த அணு நிலையத்தில் வெறும் 3 வாரத்தில் 9 அணு குண்டுகளை தயாரித்து விட முடியும்.
ஆனால் மலைக்கு கீழ் அமைந்துள்ள இந்த அணு மையத்தை இஸ்ரேலால் ஒரு கீறல் கூட போட முடியாது. அதற்கான ஆயுதம் இஸ்ரேலிடம் இல்லை. இஸ்ரேலிடம் உள்ள பிஎல்யு-109 மற்றும் ஜிபியு-28 போன்ற குண்டுகளால் அதிகபட்சம் பூமிக்கு கீழே 20 அடி கான்கிரீட் தளத்தை மட்டுமே தகர்க்க முடியும். ஆனால் அமெரிக்காவிடம் மட்டுமே போர்டோ அணு மையத்தை தகர்க்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு உள்ளது. அமெரிக்காவின் ஜிபியு-57 பங்கர் பஸ்டர் குண்டால் மட்டுமே பூமிக்கு கீழே 200 அடி ஆழத்தில் உள்ள இலக்கையும் ஊடுருவி அழிக்க முடியும். உலகில் எந்த நாட்டிடமும் இப்படிப்பட்ட சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் இல்லை. எனவே, அமெரிக்கா உதவினால் மட்டுமே ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக முடக்க முடியும் என இஸ்ரேல் கூறி வருகிறது.
காமெனிக்கு பதில் யார்?
ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி காமெனியை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 3 மதகுருமார்களின் பெயர்களை பட்டியலிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஈரானில் 657 பேர் பலி
ஜெனீவாவில் இருந்து தெஹ்ரான் திரும்பிய ஈரான் அமைச்சர் அப்பாஸ் அரக்சி அளித்த பேட்டியில், ‘‘இப்போரில் அமெரிக்கா இணைவது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. இப்போரில் அமெரிக்காவும் இணைந்தால் அது அனைவருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக முடியும்’’ என எச்சரித்துள்ளார். இதுவரை 9 நாள் போரில் ஈரானில் 263 பொதுமக்கள் உட்பட 657 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுடனான மோதலில் நீண்டகால போருக்கு இஸ்ரேல் தயாராக வேண்டுமென அந்நாட்டின் ராணுவ தலைவர் இயல் ஜமீர் தெரிவித்துள்ளார்.