இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு,பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து
18 Jun,2025
இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.
ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.
புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.
லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.
மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது.