பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்.. ஈரானில் தொலைக்காட்சி தலைமையகம் மீது தாக்குதல்! அத்துமீறும் இஸ்ரேல்
16 Jun,2025
ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சியின் தலைமையகம் மீது, இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் லைவாக ஒளிபரப்பாகி உள்ளது. செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் உயிருக்கு பயந்து ஓடும் காட்சிகள் லைவாக ஒளிபரப்பாகியுள்ளன.
ஈரானின் அரசு தொலைக்காட்சியும், ரேடியோ சேவையும் விரைவில் அழியும் என்று இஸ்ரேல் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, இன்று திடீர் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. போர் என்றாலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு வீசக்கூடாது என்பதுதான் அறம். ஆனால், இதனை இஸ்ரேல் மீறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
ஈரான் அரசு தொலைக்காட்சி ஸ்டுடியோவின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின்போது அதிர்வால் ஸ்டுடியோ குலுங்கியது. செய்தி வாசித்துக் கொண்டிருந்த, 'சஹர் இமாமி' என்ற செய்தி வாசிப்பாளர், உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். இந்த தாக்குதலால் செய்தி வாசிப்பாளர் இமாமி மற்றும் ஸ்டுடியோவில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய ஊடகம் தெரிவித்திருக்கிறது.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். எனுவே, தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் , "ஈரான் தலைவர்கள், எங்கள் நாட்டு மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை போல எங்களும், அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. இருப்பினும் நாங்கள் தெஹ்ரானின் பல முக்கிய நிலைகள் மீது தாக்குதல்களை நடத்த இருக்கிறோம். எனவே உடனடியாக மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டு மக்களை தொடர்ந்து பாதுகாப்போம்" என்று கூறியுள்ளார்.
அதுபோல இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறுகையில், "அணுகுண்டு அச்சுறுத்தல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை அகற்றுவது என இரண்டு முக்கிய இலக்குகளை நாங்கள் அடைந்து வருகிறோம். இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை வரும் நாட்களில் அதிகரிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலின் தாக்குதலில் இந்திய மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் தெஹ்ரானிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாம் நகருக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மாணவர்களையும் இந்திய மக்களையும் பாதுகாக்கும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.