இஸ்ரேல் - ஈரான் மோதல் : டெல் அவிவ் மீது ஏவுகணைத் தாக்குதலில் 10 வயது சிறுவன் உட்பட 8 பேர் பலி
15 Jun,2025
இஸ்ரேல்-ஈரான் மோதலில், இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் நான்கு அணுசக்தி உலைகள் சேதமடைந்தன. அணு விஞ்ஞானிகள்
ராணுவத் தளபதிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ராணுவ மையங்கள், விமானப்படைத் தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதில், பெரும்பாலான ஏவுகணைகளை "அயர்ன் டோம்" என்ற வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் முறியடித்தது.
எனினும், வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஒரு சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கி அழித்தன. இதனால், டெல் அவிவ் நகரில் ஏராளமான கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்தன. பல இடங்களில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்ட நிலையில், கரும்புகையும் சூழ்ந்து காட்சியளித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என மோப்ப நாய்களின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
ஈரான் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உட்பட 8 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, இன்று காலை முதல் ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.