துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 6 மணி நேரம் போராடி மீட்பு!
14 Jun,2025
துபாய்: துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் இருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 6 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
துபாயில் உள்ள மெரினா பின்னாக்கிள் பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கட்டிடத்தில் மொத்தம் 764 வீடுகளில் உள்ள நிலையில், அந்த கட்டிடத்தில் இருந்த 3,820 பேரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக துபாய் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்க, கட்டிடத்தின் மேம்பாட்டாளருடன் தொடர்புடைய அதிகாரிகள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்லது.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்கும் பணிகளில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.