இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து பாயும் ஈரான் ஏவுகணைகள்... பற்றி எரியும் மத்திய கிழக்கு
14 Jun,2025
இஸ்ரேல்-ஈரான் மோதலில், இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் ஏவுகணைகள், டிரோன்களை ஏவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்களை ஏவி வருகிறது. இஸ்ரேல் வான் பாதுகாப்பை தகர்த்து ஈரான் ஏவுகணைகள் தாக்கி வருவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறிவைத்து கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில், ஈரானின் அணுஆயுத திட்டங்களை கைவிடச் செய்யும் வகையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த சூழலில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ஈரான் புரட்சிப்படை தளபதி ஹோசைன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை டெல் அவிவ் நகரை குறிவைத்து ஈரான் ஏவின. இஸ்ரேலின் அயன் டோம் என்ற பாதுகாப்பு கட்டமைப்பை மீறி ஈரானின ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்த்தன. தொடர்ந்து 2 ஆவது நாளாக 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஏவுகணைகள் கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கியது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் 50 ஏவுகணைகளை தடுத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பலத்த தாக்குதலை தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.