அமெரிக்காவில் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு 25 நகரங்களில் கலவரம் வெடித்தது: வாஷிங்டனில் இன்று ராணுவ பேரணி
13 Jun,2025
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்தோர் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த வாரம் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் பெரும் கலவரம் வெடித்தது. தற்போது கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 1,100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சூழலில் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், ஆஸ்டின், சியாட்டில், போர்ட்லேண்ட், பிட்ஸ்பர்க், டெட்ராய்ஸ்ட், மெட்போர்டு, மின்னிபோலிஸ், சிகாகோ, நியூ ஆர்லியன்ஸ், அட்லாண்டா, ஆஸ்வில்லா உட்பட 25 நகரங்களுக்கு கலவரம் பரவி உள்ளது. இந்த போராட்டங்களின்போது சமூக விரோதிகள் கடைகளை சூறையாடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இந்த சூழலில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்று வாஷிங்டனில் பிரம்மாண்ட ராணுவ பேரணி நடத்தப்பட உள்ளது. இதனால் அமெரிக்கா முழுவதும் பதற்றம் அதிகரித்து உள்ளது.
* 2 ஆயிரம் இடங்களில் மக்கள் பேரணி
போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ள ராணுவ பேரணிக்கு பதிலடியாக அமெரிக்கா முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்த உள்ளனர். இங்கே அரசர் இல்லை என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டப்படுவதால் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.