ஈரானில் அணுஆயுத திட்டத்துக்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் மையம், ராணுவ தளம் உள்ளிட்டவற்றை குறிவைத்து திடீரென்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலின் இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் குற்றம்சாட்டி உள்ளது. இதையடுத்து அமெரிக்கா கடும் வார்னிங்கை விடுத்துள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு, லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா அமைப்பு, ஓமனில் இருக்கும் ஹவுதி அமைப்பு உள்ளிட்டவற்றிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இந்த அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசாவில் ஹமாஸ்க்கு எதிராக தற்போது போர் நடந்து வருகிறது. ஹெஸ்புல்லாக்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதும், செங்கடலில் இஸ்ரேல் கப்பல்களை குறிவைத்து ஹவுதி அமைப்பினரும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
மேலும் காசாவில் ஹமாஸ்க்கு எதிரான போரை ஈரான் எதிர்த்தது. கடந்த ஆண்டு ஈரான் தனது ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் 100க்கும் அதிகமான போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இருநாடுகள் இடையே வார்த்தை போர் நீடித்து வந்தது. ஆனால் இருநாடுகளும் நேரடியாக தாக்கி கொள்ளவில்லை.
இதற்கிடையே தான் இன்று ஈரான் மீது இஸ்ரேல் திடீரென்று தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளம், அணுஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியத்தை செறிவூட்டும் மையம், எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ அதிகாரிகள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணுஆயுதம் தயாரிக்கமாட்டோம் என ஈரான், அமெரிக்காவிடம் உறுதியளிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் விரும்புகிறார். இதுதொடர்பாக 5 கட்ட பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்றுள்ளது. இதில் இன்னும் உடன்பாடு ஏற்டவில்லை.
இதனால் ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையே ஓமனில் ஈரான் - அமெரிக்கா இடையே 6 வது பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இஸ்ரேல் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக ஈரான் குற்றம்சாட்டி உள்ளது. மேலும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சார்ந்த உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முற்றிலுமாக மறுத்துள்ளார். ‛‛ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடவில்லை.எங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை. எங்களின் இப்போதைய முதன்மை முன்னுரிமை அந்த பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதாகும்" என்று கூறியுள்ளார்.
அதோடு ஈரானுக்கு அமெரிக்கா கடும் வார்னிங்கையும் செய்துள்ளது. இதுதொடர்பாக மார்கோ ரூபியோ, ‛‛நான் உறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இந்த தாக்குதலுக்காக ஈரான் அமெரிக்காவின் நலன் மற்றும் மக்களை குறிவைக்க கூடாது'' என்று வார்னிங் செய்துள்ளார். இதனால் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது. இதனால் விரைவில் பெரிய போர் வெடிக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.