ஏர் இந்தியா விமான விபத்து.. உயிர் பிழைத்த ஒரே பயணி யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்?
12 Jun,2025
விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று குஜராத் சுகாதாரத்துறை தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். விமானத்தின் 11 ஏ என்ற இருக்கையில் பயணித்து உயிர் பிழைத்த நபரின் பெயர் விஷ்வாஸ் குமார் ரமேஷ் ஆகும். 40 வயதான இவர் இந்திய வம்சாளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிறபகல் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து சரியாக 1.38 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
கீழே விழுந்ததும் வெடித்து சிதறியது. தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் பயணித்த பயணிகள் தீயில் கருகினர். அகமதாபாத் அருகே உள்ள பெஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கு விடுதியில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். தீயில் கருகி பலியானவர்கள் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று குஜராத் சுகாதாரத்துறை தரப்பில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். விமானத்தில் பயணம் செய்த 230 பயணிகளில் ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பயணி தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் 11 ஏ என்ற இருக்கையில் பயணித்து உயிர் பிழைத்த நபரின் பெயர் விஷ்வாஸ் குமார் ரமேஷ் ஆகும். 40 வயதான இவர் இந்திய வம்சாளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்து இருப்பதாக வெளியான தகவல் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்தது.
விமான விபத்தில் தப்பி உயிர் பிழைத்த அந்த நபர், வெள்ளை டிஷர்ட் அணிந்துள்ளார். காலில் அடிபட்டதால் தடுமாறியபடி நடந்து சென்ற விஷ்வாஸ் குமாரின் டிஷர்ட்டிலும் ரத்த கறை படிந்து இருந்தது. காயங்களுடன் உயிர் தப்பிய அவர், தன் சகோதரரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும், லண்டனில் 20 வருடமாக வசித்து வருவதாகவும் இந்தியாவில் தனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு லண்டன் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் விமானம் விபத்துக்குள்ளானதும் நான் முழித்து பார்த்தேன். அப்போது என்னை சுற்றி கூட்டம் கூட்டமாக சடலங்கள் கிடந்தன. நிறைய பேர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தான் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும் கூறினார்.