ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை தொடங்கியது. விமானங்கள் விபத்து குறித்து விசாரிக்கும் புலனாய்வுப் பிரிவு தனது குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது.
*12 ஊழியர்கள் உள்பட 242 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் A1171 வகை பயணிகள் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பகல் 1.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மேகானி நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
*14 ஆண்டுகளுக்கு பின் டேக் ஆஃபின் போது இந்தியாவில் விமானம் விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
*ஏர் இந்தியா விமானம் AI171 ஒரு பேரழிவான விபத்தில் சிக்கியது என்றும் மேலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் பகிரப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
*169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகல், கனடாவைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் பயணித்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் பெரும்பாலானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். 11 சிறார்கள், 2 குழந்தைகளும் விமானத்தில் இருந்துள்ளனர்.
*அனுபவம் வாய்ந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானி சுமீத் சபர்வால் சுமார் 8,200 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.
*விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளார் விமானி. கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தொடர்பு கொண்டு விமானம் ஆபத்தில் இருப்பதை குறிக்கும் வகையில் “மே டே” என அவசர தகவல் அனுப்பினார்.
*விமான விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி படுகாயம் அடைந்துள்ளார்.
*ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அகமதாபாத்தில் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. விமான விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
*அகமதாபாத் விமான விபத்தை அடுத்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. 011-2461 0843 மற்றும் 96503 91859 என்ற அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம்.
*விமான விபத்து தொடர்பாக 1800 5691 444 என்ற அவசர எண்ணை அறிவித்தது ஏர்இந்தியா. அதே போல், 020 7008 5000 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது பிரிட்டன் அரசு.
*அகமதாபாத்தில் விமான விபத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் DP-ஐ கருப்பு நிறத்திற்கு மாற்றியது ஏர் இந்தியா நிறுவனம்
*உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
*விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மதிய உணவு நேரத்தில் மருத்துவ மாணவர்கள் கூடியிருந்தபோது விடுதி மீது விமானம் விழுந்துள்ளது.
*சென்னையில் இருந்து அகமதாபாத், அகமதாபாத்தில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
*அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து இண்டிகோ விமானம் சென்னை திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் பாதி வழியிலேயே திருப்பி விடப்பட்டது.