பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடுஸ மாணவர்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி
11 Jun,2025
ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ரஸ் எனும் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளியில் இன்று அந்நாடு நேரப்படி காலை 10.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், அந்தப் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் மற்றும் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேர் வரை பரிதாபமாக மரணித்துள்ளனர்.
ஐரோப்பாவின் ஆஸ்திரிய நாட்டில் உள்ள க்ரஸ் எனும் பகுதியில் ஒரு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்திற்கு இன்று அந்நாட்டின் நேரத்தின்படி காலை 10.30 மணிக்குத் தொடர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அந்தப் பகுதி காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.
அப்போது பள்ளி வளாகம் முழுக்கப் பெரும் பதட்டத்துடன் இருந்துள்ளது. உடனடியாகக் களத்தில் இறங்கிய காவல்துறையினர், அங்கிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அதேசமயம், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.
இந்த முயற்சியின்போது, குற்றவாளி பள்ளிக் கழிவறைக்குள் சென்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து, காவல்துறையினர் வேறு யாரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனரா எனத் தேடியுள்ளனர். ஆனால், அந்த ஒரு நபர் மட்டுமே இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அந்த நபரையும், பள்ளியில் துப்பாக்கிச் சூட்டால் மரணித்துள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 நபர்களின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் பெயர், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என எந்த அடையாளமும் தெரியவரவில்லை. தொடர்ந்து அந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.