சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்த விவகாரத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4வது நாளாக வன்முறை நீடிக்கும் நிலையில், போராட்டத்தை அடக்க மேலும் 2,000 தேசிய படைகளையும், 700 கடற்படை வீரர்களையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக, மெக்சிகோ உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தேடிப்பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு பணியிடங்களில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களை கைது செய்தனர்.
அப்போது, அதிகாரிகளை தடுக்க முயன்றதாக கலிபோர்னியா தொழிலாளர் சங்க தலைவர் டேவிட் ஹூர்டா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்சின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடங்கின. முதலில் அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிரம்ப் அரசை கண்டித்து சாலையில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அரசு கட்டிடங்களுக்கு முன்பாக போராட்டக்காரர்கள் குவிந்தனர். உள்ளூர் காவல்துறை போராட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தேசிய படையை அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார். பொதுவாக மாகாண ஆளுநர் வலியுறுத்தினால் மட்டுமே ராணுவத்தின் தேசிய படைகளை அதிபர் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இந்த விதியை காற்றில் பறக்க விட்ட அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி வைத்தார்.
இது போராட்டக்காரர்களை மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் பல தரப்பினரையும் ஆத்திரமூட்டியது. டிரம்புக்கு எதிராக அஸ்டின், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பிளடெல்பியா போன்ற நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. லாஸ் ஏஞ்சல்ஸ்சில் 4வது நாளாக நேற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த 2 நாட்களை காட்டிலும், திங்கட்கிழமை போராட்டங்கள் வலுவிழந்து காணப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கால் டாக்சிகளை சிலர் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, வன்முறையை முற்றிலும் ஒடுக்க மேலும் 2,000 தேசிய படை வீரர்களையும், 700 கடற்படை வீரர்களையும் அதிபர் டிரம்ப் நேற்று லாஸ் ஏஞ்சல்சுக்கு அனுப்பி வைத்தார். நகரில் ஏற்படும் வன்முறை, போராட்டங்களை ஒடுக்க சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இது லாஸ் ஏஞ்சல்ஸ் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருப்பதோடு, கலிபோர்னியா மாகாண ஆளுநர் நியூசம் மற்றும் அதிபர் டிரம்ப் இடையே நிர்வாக மோதலையும் ஏற்படுத்தி உள்ளது. அதோடு, வன்முறையை அடக்க தேசிய படைகளை அனுப்பிய அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகவும் அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, டிரம்பின் பல்வேறு முடிவுகளால் அமெரிக்க மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில், டிரம்பின் முதன்மை ஆலோசகராக இருந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பதவி விலகி உள்ளார். அவருக்கும் டிரம்புக்கும் இடையேயான நட்பு முறிந்துள்ளது. இந்த விவகாரங்களை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் டிரம்ப் ஆட்சிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் கட்டத்திற்கு தீவிரமடைந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் போராட்டத்தை ஒடுக்க தேசிய படைகளை கொண்டு வந்த விவகாரத்தில் கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசமுக்கும், அதிபர் டிரம்புக்கும் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் எந்த கருத்தும் கேட்காமல், தேசிய படைகளை கொண்டு வந்து எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக டிரம்ப்பை ஆளுநர் விமர்சித்துள்ளார். மேலும், சர்வாதிகாரத்தனமாக டிரம்ப் எடுக்கும் முடிவுகள் மக்களை காப்பதற்கானது அல்ல என்றும் அவரது ஈகோவுக்காக மட்டுமே லாஸ் ஏஞ்சல்சில் அவர் படைகளை குவிப்பதாகவும் நியூசம் குற்றம்சாட்டி உள்ளார்.
பதிலுக்கு டிரம்ப், ஆளுநர் நியூசம் மற்றும் உள்ளூர் காவல்துறை போராட்டத்தை அடக்க திறமையில்லாதவர்கள் என்பதால் தேசிய படையை கொண்டு வந்ததாக கூறி உள்ளார். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் விவகாரத்தில் யார் குறுக்கே நின்றாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் நியூசமை டிரம்ப் மிரட்டி உள்ளார். எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் நியூசமுக்கும் டிரம்புக்கும் இடையேயான மோதலும் கொளுந்து விட்டு எரிகிறது