பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதலுக்கு எதிராக பிரபல சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பர்க் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், நிவாரண பொருட்களுடன் அவர் காசாவுக்குள் நுழைய முயன்ற நிலையில், இஸ்ரேல் கடற்படை அவரை கைது செய்திருக்கிறது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவிகளை இஸ்ரேல் திடீரென முழுவதுமாக நிறுத்தியிருந்தது. சர்வதேச அளவில் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை.
எனவே கிரேட்டா தன்பர்க், பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிமா ஹசன் என 12 தன்னார்வலர்களுடன், நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு காசாவை நோக்கி கடல் வழியாக 'மாட்லீன்' எனும் படகில் புறப்பட்டார். இந்த பயணத்தை 'சுதந்திர புளோட்டிலா கூட்டணி' (Freedom Flotilla Coalition) என்கிற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த வாரம் இத்தாலியின் சிசிலி கடற்கரையிலிருந்து பயணத்தை கிரேட்டா தன்பர்க் தொடங்கியிருந்தார்.
படகு இன்று அதிகாலை காசாவை நெருங்கி வந்தது. ஆனால் காசாவின் கடற்பரப்பு முழுவதும் இஸ்ரேலிய கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எனவே, கிரேட்டாவையும் அவருடன் வந்த தன்னார்வலர்களையும் கடற்படையினர் வழிமறித்து கைது செய்திருக்கின்றனர். இதனால் நிவாரண பொருட்களை காசாவுக்குள் கொண்டு சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்ட கிரேட்டா விளம்பர நோக்கங்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியிருக்கிறது. கிரேட்டா மற்றும் அவருடன் வந்த 12 பேரும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு, நாடு கடத்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
ஹமாஸை அழிப்பதுதான் நோக்கம் என்று சொல்லி இந்த போரை இஸ்ரேல் தொடங்கியது. ஹமாஸின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இருப்பினும் போர் நிற்கவில்லை. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போரில் ஏறத்தாழ 54,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐநா பாதுகாப்பு சபையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அமெரிக்கா இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துவிட்டது.
மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை கடுமையாக குறைத்திருக்கிறது இஸ்ரேல். எனவே, கடும் பஞ்சம் காசாவை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த பின்னணியில்தான் கிரேட்டா தன்பர்க் காசாவுக்கு பயணித்தார். அவரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி தற்போது கைது செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவியை வாங்க வந்தவர்கள் பலி! அராஜகம்
இஸ்ரேல்-பாலஸ்தீன போரில், புதியதாக 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 4 பேருமே பொதுமக்கள்தான். நிவாரண உதவியை வாங்க, GHF உதவி மையத்தின் அருகே குவிந்தபோது சந்தேகத்தின் பேரில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். உதவியை பெற வந்தவர்களை ராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.
ஆனால் மக்கள் உணவுக்காக நீண்ட நேரமாக காத்திருப்பதால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. இதில் 4 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற புதிய அமைப்பு, காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஆனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உணவு, மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும், மற்ற நேரங்களில் இது போர் நடக்கும் பகுதியாக கருதப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, தெற்கு ரஃபாவுக்கு அருகே உள்ள மனிதாபிமான உதவி மையத்தின் அருகே மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அப்போதுதான் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மனிதாபிமான உதவி மையங்களுக்கு அருகே தாக்குதல் நடத்தப்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல்முறையல்ல. தொடர்ந்து இதுபோன்று பல சம்பவங்கள் தெரிய வந்திருக்கின்றன. ஆனால், உயிரிழப்புகளும், காயமடைந்தோரின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. GHF உதவி மையங்கள் உருவாக்கப்பட்டதே கடும் விமர்சனங்களுக்கு மத்தியில்தான்.
காசாவில் ஐநா சார்பில்தான் உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த உதவிகளை, ஹமாஸ் போராளிகள் பெற்றுக்கொள்கிறார்கள் என்று இஸ்ரேல் விமர்சித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை ஐநா மறுத்தபோதும், ஐநாவுக்கு மாற்றாக நாங்கள் GHF உதவி மையங்களை கொண்டு வருகிறோம் என்று வீம்பு இஸ்ரேல் செயல்பட்டது. இப்படி திறக்கப்பட்ட உதவி மையங்களால் பெரிய அளவுக்கு பயன்கள் ஏற்படவில்லை.
மட்டுமல்லாது இது நடைமுறைக்கு செட் ஆகாததாக இருக்கிறது. GHF உதவி மையங்கள் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே, பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. முதல் மூன்று நாட்களில் 60க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.