கொலம்பியா! நிலநடுக்கம்..6.5 ஆக ரிக்டரில் பதிவு வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்
08 Jun,2025
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கொலம்பியா தலைநகர் போகோட்டா நகரம் குலுங்கியது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மனியின் GFZ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவாகியது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நிலநடுக்கத்தால் பொகோடா நகரத்தில் சைரன்கள் ஒலித்தன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பொகோடாவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்கள் அசைந்தது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கொலம்பியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
பொகோடாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி ஒருவர் கூறுகையில், "இந்த நிலநடுக்கம் ரொம்ப பயங்கரமா இருந்தது" என்று தெரிவித்தார். மத்திய கொலம்பியாவில் அடிக்கடி நிலநடுக்கம் வரும் அபாயம் உள்ளது. இதற்கு முன்பு, 1999-ல் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 1,200 பேர் இறந்தனர். அதே நாளில் அந்நாட்டு அதிபர் வேட்பாளர் சுடப்பட்ட சம்பவம் அம்மக்களை கவலையில் ஆழ்த்தியிருந்தது.
கொலம்பியாவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. ஜனநாயக மையக் கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் 'மிகுவல் உரிபே' பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது 'உரிபே' உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கொலம்பியா மக்களை உலுக்கிய நிலையில், தற்போது இயற்கை பேரிடரும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது