அலாஸ்கா அருகே 3,000 கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்த மின்சார வாகனங்களில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அலாஸ்காவின் அலூஷியன் தீவுத் தொடருக்கு அருகே, மின்சார வாகனங்கள் ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. "மார்னிங் மிடாஸ்" எனப்படும், லாரி மற்றும் கார்களை ஏற்றிச் செல்லும் 600 அடி நீளமுடைய லைபீரிய சரக்குக் கப்பலில் 3,000 வாகனங்கள் இருந்தன. இதில் 800 மின்சார வாகனங்களும் அடங்கும்.
இந்த கப்பல் மே 26ஆம் தேதி சீனாவின் யாண்டாயிலிருந்து புறப்பட்டு, மெக்சிகோவின் பசிபிக் கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகமான லாசரோ கார்டெனாஸை நோக்கி பயணித்தது. ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை,
அலாஸ்காவின் அடக் தீவுக்கு தென்மேற்கில் சென்று கொண்டிருந்தபோது கப்பலில் இருந்து திடீரென தீவிரமான புகை வெளியேறத் தொடங்கியது. ஆரம்பத்தில் புகை, மின்சார வாகனங்கள் ஏற்றப்பட்ட டெக்கில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார வாகனங்களில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகள் தீவிரமாக தீயை உண்டாக்கி இருக்கக்கூடும் மற்றும் அதனால் கடும் புகை கிளம்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
சோடியாக் மேரிடைம் ஒரு அறிக்கையில், இந்த கப்பலின் மேலாண்மை நிறுவனமும், அமெரிக்க கடலோர காவல்படையும் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கப்பலில் தீ பரவத் தொடங்கியதும், உடனடியாக எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தால், கப்பலில் இருந்த 22 பேரைக் கொண்ட குழுவினர் உடனடியாக கப்பலை விட்டு லைஃப் ஃபோட்டில் வெளியேறினர்.
"கோஸ்கோ ஹெல்லாஸ்" எனும் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் அதில் இருந்த யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. தற்போது அமெரிக்க கடலோர காவல்படை, சம்பவ இடத்திற்கு விமானக் குழு மற்றும் கப்பல்களை அனுப்பி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் வரை, தீயை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தபோதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது.
இந்த மீட்பு நடவடிக்கை வடக்கு பசிபிக் பகுதியில் நடந்தது, இது ஆங்கரேஜுக்கு மேற்கே சுமார் 1,200 மைல்கள் (1,930 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது. அமெரிக்க கடலோர காவல்படையின் 17வது மாவட்ட தளபதி ரியர் அட்மிரல் மேகன் டீன், “இந்த மீட்பு நடவடிக்கையில் சுயநலமின்றி உதவிய மூன்று வணிகக் கப்பல்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, 22 உயிர்களை காப்பாற்றிய கோஸ்கோ ஹெல்லாஸின் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்தார்.”
மார்னிங் மிடாஸ் 2006இல் கட்டப்பட்டது மற்றும் லைபீரிய கொடியின் கீழ் இயங்கி வருகிறது. இது மே 26 அன்று சீனாவின் யான்டாயிலிருந்து புறப்பட்டதாக marinetraffic.com என்ற தொழில்துறை தளம் தெரிவித்துள்ளது. மெக்ஸிகோவின் ஒரு பெரிய பசிபிக் துறைமுகமான லாசாரோ கார்டனாஸுக்கு கார்கள் அனுப்பப்பட்டன என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.