கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. சமீபத்தில் தான் ரஷ்யா மீது மிகப் பெரிய ஒரு ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருந்தது. இதற்கிடையே அந்த தாக்குதல் நடந்து 2 நாள் கூட ஆகாத நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த 2022ல் ஆரம்பித்த ரஷ்யா உக்ரைன் போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இதுவரை எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் ரஷ்யா மீது உக்ரைன் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் நிலைமை மோசமானது.
இதற்கிடையே ரஷ்யாவைக் குறிவைத்து மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் ரஷ்யா மீது உக்ரைன் நடத்தும் 2வது தாக்குதல் இதுவாகும். கிரிமியன் பாலத்தைக் குறிவைத்து 1,000 கிலோவுக்கு அதிகமான வெடி பொருட்களை வைத்து உக்ரைன் தாக்கியது. இதற்காக நீருக்கு அடியில் வெடிக்கக்கூடிய வெடி மருந்துகளை உக்ரைன் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. கிரிமியா பாலத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதை உக்ரைன் உளவுத் துறை உறுதி செய்துள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் உக்ரைன் 'ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப்' என்ற ராணுவ நடவடிக்கையை எடுத்திருந்தது. அதில் இருந்தே ரஷ்யா முழுமையாக மீண்டு வராத நிலையில், இப்போது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றையும் உக்ரைன் பகிர்ந்துள்ளது. அதில் நீரிலிருந்து ஏதோ வெடித்துச் சிதறுவதும் இதனால் பாலத்தின் பக்கவாட்டிலும் சேதம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது..
பாலத்தின் நீருக்கு அடியில் உள்ள ஒரு தூணில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு வெடிக்கச் செய்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்புத் துறை மேலும் கூறுகையில், "இதற்கு முன்பும் கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கிரிமியா பாலத்தைத் தாக்கியுள்ளோம். இப்போது மூன்றாவது முறையாக அந்த பாலத்தைத் தாக்கியுள்ளோம்" என்றார்.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, கிரிமியா கெர்ச் பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதேநேரம் இந்த குண்டுவெடிப்பால் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையே பாலம் சிறிது நேரத்தில் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், உக்ரைன் அடுத்தடுத்து இதுபோல நடத்தும் தாக்குதலால் புதின் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏன் முக்கியம்
சேதம் பெரியளவில் இல்லை என்றாலும் கூட இந்த கொர்ச் பாலத்தின் மீது உக்ரைன் நடத்தியுள்ள தாக்குதல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த பாலம் மூலமாகவே உக்ரைனுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பி வருகிறது.. ரஷ்யாவிற்கும் கிரிமியாவிற்கும் இடையே ஒரு நேரடி இணைப்பை இந்த பாலம் தான் ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் அதை மொத்தமாக காலி செய்ய உக்ரைன் முயன்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முதலில் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே உக்ரைன் இருந்துள்ளது. கடந்த 2014இல் கிரிமியா மீது போர் தொடுத்த ரஷ்யா, கிரிமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த கிரிமியா படையெடுப்பு தான் உக்ரைன் ரஷ்யா போரின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கிரிமியா தனக்குச் சொந்தமான பகுதி என்றும் ரஷ்யா அதைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக உக்ரைன் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அதேநேரம் கிரிமியாவை விட்டு கொடுக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. சமீபத்தில் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் கூட கிரிமியாவை ரஷ்யப் பிரதேசமாகச் சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக ரஷ்யா வைத்திருந்தது.