இத்தாலியின் 'மவுன்ட் எட்னா' எரிமலை உக்கிரமாக வெடித்து சிதறியுள்ளது. இது உலகில் ஆக்டிவாக இருக்கும் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றாகும். எனவே இதன் வெடிப்பு சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிமலைகளால் உலகம் அழியவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்னரும் எரிமலை வெடிப்புகள் உலகத்தை அழித்திருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய தேதியில் 1,350 எரிமலைகள் பூமியில் ஆக்டிவாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இத்தாலியில் உள்ள மவுன்ட் எட்னா எரிமலை.
கடந்த சில ஆண்டுகளாக இது உருமிக்கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் தற்போது வெடித்து சிதற தொடங்கியுள்ளது. முதற்கட்டாக இந்த எரிமலையிலிருந்த சாம்பல்களும், நச்சு வாயுக்களும் வெளியேறிக்கொண்டிருக்கின்றன. இது எப்போது வேண்டுமானாலும் 'லாவா' எனும் எரிமலை குழம்பை வெளியில் கக்க வாய்ப்பு இருக்கிறது. இது 19,237 ஹெக்டர் பரப்பளவில் இருக்கிறது. இந்த இடத்தில் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதால் உடனடியான ஆபத்து இல்லை. ஆனால் லாவா வெளியே வந்தால் பாதிப்பு ஏற்படும்.
எட்னா எரிமலை இத்தாலியின் கிழக்கு கடற்கரை ஓரம் அமைந்திருப்பதால், இதிலிருந்து வெளியேறும் லாவா ஊருக்குள் வரும் என்று அச்சப்பட வேண்டாம். அது அப்படியே கடலில் கலக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது ஏறத்தாழ 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே வெடிக்க தொடங்கிவிட்டது என்றும், கடந்த 2,700 ஆண்டுகளாக இது வெடித்துக்கொண்டே இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
என்னதான் இந்த எரிமலை வெடிப்பு பார்க்க கோரமாக இருந்தாலும், இந்த வெடிப்பின் மூலம் வெளிவரும் சாம்பல் எரிமலையை சுற்றியுள்ள லட்சக்கணக்கான தாவரங்களுக்கு உரமாக அமைந்திருக்கிறது. அதாவது இப்போது வெளியேறும் சாம்பல், மலைக்கு கீழே இருக்கும் மொத்த செடி, கொடி, மரங்களையும் அழித்துவிடும். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து இதே பகுதியில் செழிப்பான காடு உருவாகும். இந்த காடு தாவரங்களுக்கு மட்டுமல்லாது, பல உயிர்களுக்கும் புதிய வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த யுனெஸ்கோ, இந்த எரிமலையை கடந்த 2013ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இதற்கு முன்னர் கடந்த 1669ம் ஆண்டு இந்த எரிமலை கடுமையான வெடித்து சிதறியுள்ளது. இந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 14 கிராமங்களையும், சில நகரங்களையும் இந்த எரிமலை அழித்ததாகவும், இதனால் 20,000 பேர் வரை உயிரிழந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதை தொடர்ந்து 2000, 2001, 2002-2003, 2004-2005, 2008-2009, 2012 ஜனவரி-ஏப்ரல் மாதங்களிலும், அதே ஆண்டு ஜூலை-அக்டோபர் மாதங்களிலும், 2018ல் டிசம்பர் மற்றும் 2021ல் பிப்ரவரி ஆகிய மாதங்களிலும் எரிமலை வெடித்து சிதறியிருக்கிறது. ஆனால் 1669ம் ஆண்டு ஏற்படுத்தி பேரழிவை போல பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது எரிமலை வெடித்து சிதறியிருப்பது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு சாதாரணமானதாக இருக்குமா? அல்லது 1669ம் ஆண்டை போல பேரழிவை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.