இஸ்ரேல் திடீர் துப்பாக்கி சூடு.. .26 பேர் பலி, 100.. படுகாயம்!
01 Jun,2025
காசா பகுதியில் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இதற்கிடையே காசா பகுதியில் உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100+ பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இதுவரை எடுத்த எந்தவொரு முயற்சிகளும் பலன் தரவில்லை. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனால் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே இன்று அப்படி இஸ்ரேல் நடத்திய ஒரு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காசா மனிதாபிமான அறக்கட்டளை ரஃபா நகரில் நடத்தும் உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் மையத்திற்கு அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன செய்தி நிறுவனமான WAFA மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் உடனடியாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை. அதேநேரம் இந்தத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டது மட்டுமின்றி 115 பேர் காயமடைந்துள்ளதாகப் பாலஸ்தீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காசாவின் ரஃபாவில் உள்ள அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்படும் உதவி மையத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அங்கு வந்த இஸ்ரேல் படைகள் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அதிகாலையில் உதவி பொருட்களைப் பெறப் பல ஆயிரம் பாலஸ்தீனியர்கள் ஒன்று கூடியிருந்த நிலையில், அப்போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.. இஸ்ரேலிய டாங்கிகள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். இப்போது அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.