புதிய இணைப்பு
வாஷிங்டன், டிசியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு யூத எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு தூண்டுதல் சூழலே காரணம் என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தூண்டுதல்கள் பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளாலும், குறிப்பாக ஐரோப்பாவிலிருந்தும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கும் யூத சமூகத்திற்கும் எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் அதிக கவலை இருப்பதாக சார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் டிசியில் உள்ள தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன், கொடூரமான யூத எதிர்ப்பு கொலையால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கான இஸ்ரேலிய தூதர் மற்றும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோர் இந்த விவரங்களைப் பற்றித் தமக்குத் தெரிவித்ததாகவும், கொலையாளியை அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
யூத எதிர்ப்புக்கு எதிராக தெளிவாக நின்றதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நெதன்யாகு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விடயங்கள் இடம்பெற்றது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவில் வாஷிங்டன், டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்தின் முன் இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர்கள் "சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்" என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு
யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும்போது குறித்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அந்த நேரத்தில் நான்கு இஸ்ரேல் அதிகாரிகள் அங்கு இருந்ததாகவும் அவர்களில் இரண்டு பேர் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்ற சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.