சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் தலையிட முடியாது.. உலக வங்கி தலைவர் அறிவிப்பு
09 May,2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை அதிரடியாக நிறுத்தி வைத்தது. இந்த ஒப்பந்தம் என்பது உலக வங்கி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் உலக வங்கி உடனடியாக தலையீட்டு இந்தியாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. அதனை உலக வங்கியின் தலைவரும், இந்தியா வம்சாவளியுமான அஜய் பங்கா மறுத்துவிட்டார். இது பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதற்கு இப்போது நம் நாட்டின் முப்படைகள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக நம் நாடு அறிவித்தது.
கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன.
ஆனால் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக நம் நாடு அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. அதாவது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் அதில் உள்ளது போல் பாகிஸ்தானுக்கு நம் நாடு தண்ணீர் என்பது வழங்க வேண்டி இருக்காது. ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சிந்து நதிநீர் என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் 22 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த சிந்து நதிநீரை நம்பித்தான் உள்ளனர். விவசாயம், குடிநீருக்கு இதனை தான் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
இதற்கிடையே தான் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்த விவகாரத்தில் மீண்டும் உலக வங்கி தலையிட வேண்டும். இந்தியாவிடம் பேசி சிந்து நதிநீரை பெற்று தர வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது. அதேபோல் உலக வங்கி இந்த விவகாரத்தில் தலையீடு செய்யும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பாகிஸ்தான் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த விவகாரத்தில் தலையீடு செய்ய உலக வங்கி இன்று மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் நிறைய யூகங்கள் வந்துள்ளன. ஆனால் அது எல்லாம் முட்டாள்தனமானது. ஏனென்றால் இந்த விஷயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மட்டுமே செயல்பட்டது. சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தம் மட்டுமே செய்தோம். மற்றபடி தலையீடு செய்ய முடியாது'' என்று கூறியுள்ளார். இது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. அதோடு உலக வங்கி இந்தியாவிடம் இருந்து சிந்து நதிநீரை பெற்று தரும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக மாறி உள்ளது.
உலக வங்கியின் தலைவராக உள்ள அஜய் பங்கா மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவருக்கு வயது 63. இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தி்ல உள்ள இந்திய மேலாண் நிறுவனம் (ஐஐஎம்) ஆகியவற்றில் பொருளாதார படிப்புகளை முடித்தார். நெஸ்லே, பெப்சிகோ நிறுவனங்களில் பணியாற்றினார். மேலும் பல நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்டார். அதன்பிறகு 2007 ல் அமெரிக்க குடியுரிமையை பெற்ற இவர் கடந்த 2015ல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் அங்கம் வகித்த நிலையில் தற்போது உலக வங்கி தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.