பாகிஸ்தான் கதறிக் கொண்டிருக்க... பஞ்சாபில் விழுந்த விமானம்! பதறிப் போன மக்கள்... .விரைந்த விமானப்படை!
07 May,2025
சண்டிகர்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவமும் விமானப் படையும் இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா விமானப்படை தளம் அருகே அடையாளம் தெரியாத விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அதனை வீடியோ எடுத்த போது திடீரென ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 25க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்து இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்தியா தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் அதாவது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் பஞ்சாப் மாநிலம் பத்திந்தா பகுதியில் அடையாளம் தெரியாத விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் அப்போது ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபின் பதிண்டா விமானப்படை தளத்திற்கு அருகே, அகாலி குர்ட் கிராமம் அருகே நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் விமானம் ஒன்று வெடித்து விழுந்தது. இந்த விபத்தில், ஹரியானாவை சேர்ந்த கோவிந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் 9 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். விமானம் விழுந்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற கோவிந்த வீடியோ எடுக்க முயன்றுள்ளார். கோவிந்த் ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோவிந்த் அப்பகுதியில் நிலங்களை அறுவடை செய்ய வந்திருந்தார். விபத்து ஏற்பட்ட நிலையில், தீப்பற்றிய விமானத்திற்கு அருகில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட வெடிப்பால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்து நடந்த இடத்தை நோக்கி சென்ற கிராம மக்கள் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே பஞ்சாப் போலீசார் அங்கு சென்று, தீயணைப்பு படையினரின் உதவியுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், விமானத்தின் உடைந்த பாகங்கள் முழுவதும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான விமானம் தொடர்பான தகவல் இதுவரை உறுதியாகவில்லை. இதுபோல, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், பத்திந்தா அருகே இந்த விமான விபத்து நடந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விமானம் குறித்த தகவல்களை இந்திய விமானப்படையோ, பஞ்சாப் காவல்துறையோ இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.