சவூதி அரேபியாவை மிரளவிட்ட ‛புழுதி புயல்’..
06 May,2025
சவூதி அரேபியாவின் மத்திய மாகாணமான அல் காசிமில் திடீரென்று புழுதிப்புயல் ஏற்பட்டது. தரையில் இருந்து வானத்தை மறைக்கும் வகையில் புழுதிப்புயல் பல அடி உயரத்துக்கு எழுந்து வந்ததால் பொதுமக்கள் அலறினர். சவூதி அரேபியா.. பாலைவன தேசம் என அழைக்கப்படுகிறது. இங்கு மழை என்பது மிகவும் குறைவு. வெயில் தான் கொளுத்தி எடுக்கும். கோடை காலம் என்றால் சவூதி அரேபியா வெயிலை சொல்ல வேண்டாம். 45 டிகிரி செல்சியஸை கூட தாண்டி மக்களை ஓடவிடும்.
சவூதி அரேபியாவில் மழை என்பது அபூர்வமாக தான் பெய்யும். ஆனாலும் கூட சில வேளைகளில் அதிகப்படியான மழை கொட்டித்தீர்க்கும். இதனால் சவூதி அரேபியாவின் நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடும். சவூதி அரேபியாவை எடுத்து கொண்டால் 90 சதவீத நிலம் என்பது மணல் நிறைந்த பகுதியாக தான் இருக்கிறது. இதனால் சூறைக்காற்று சமயத்தில் பொதுவெளியில் நடமாடுவது பெரும் சிரமமாக இருக்கும். இப்படியான சூழலில் தான் தான் தற்போது சவூதி அரேபியாவில் புழுதிப்புயல் வீசி உள்ளது.அதாவது சவூதி அரேபியாவின் மத்திய மாகாணமாக அல் காசீம் உள்ளது.
இந்த மாகாணத்தில் கடந்த 4ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை பல இடங்களில் திடீரென்று புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பாலைவனம் மற்றும் மணல் நிறைந்த வறண்ட பிரதேசங்களில் சூறைக்காற்று வீசும்போது புழுதிப்புயல் என்பது உருவாகும். ஆனால் சவூதி அரேபியாவில் இப்போது உருவான புழுதிப்புயல் என்பது அனைவரையும் மிரள வைத்தது. ஏனென்றால் சுனாமி அலையை விட உயரமாக இந்த புழுதிப்புயல் தாக்கியது. அல்காசீம் மாகாணத்தின் பல இடங்களில் இந்த புழுதிப்புயல் உருவானது. தரையில் இருந்து சுமார் 100 அடி உயரத்துக்கும் மேலாக புழுதிப்புயல் ஏற்பட்டது.
இதனால் இந்த புழுதிப்புயல் வானத்தை மறைத்தது. புழுதிப்புயலை பார்த்த மக்களில் சிலர் அப்படியே நின்ற நிலையில், பலரும் பயந்து ஓடினர். இதுதொடர்பான வீடியோ என்பது தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இதுபற்றி காசீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வானிலை ஆய்வாளருமான அப்துல்லா எல் மிஸ்நாத் கூறுகையில், ‛‛இந்த புழுதிப்புயலை அறிவியல்பூர்வமாக கூறலாம். அதாவது Cumulonimbus மேகத்தில் இருந்து வேகமாக வரும் கீழ்நோக்கிய காற்று என்பது புழுதிகள் மற்றும் தூசிகளை நகர செய்கின்றன. இது தான் புழுதிப்புயலாக மாறுகிறது.
இந்த புழுதிப்புயல் என்பது அதிகபட்சமாக தரையில் இருந்து 2 ஆயிரம் அடி உயரம் வரை ஏற்படலாம். மேலும் 100 கிமீ வேகத்தில் காற்றை வீசவும் செய்யலாம். இந்த புழுதிப்புயல் என்பது போக்குவரத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறலாம்'' என்றார். இந்த புழுதி புயல் காரணமாக சவூதி அரேபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் ‛ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. அல் காசீம், ரியாத் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் என்று மொத்தம் 5 மாகாணங்களுக்கு புழுதி புயலுக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் மத்தியில் வரை இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படலாம் என்றும் வார்னிங் செய்யப்பட்டுள்ளது. தற்போது சவூதி அரேபியாவில் புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிலும் புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த புழுதிப்புயலின் தாக்கம் என்பது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.