அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.4 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை
02 May,2025
அர்ஜென்டினாவில் இன்ற திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான நிலையில் அர்ஜென்டினா மற்றும் சிலி பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் நிலநடுக்கங்கள் லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகின்றன. ஆனாலும் சில வேளைகளில் நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சமீத்தில் மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மியான்மர் அதிகமாக பாதிக்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். இந்நிலையில் தான் இன்று அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் இன்று 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் பற்றிய விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் சார்பில்,
‛‛தெற்கு அர்ஜென்டினாவின் உஷுவாயாவிலிருந்து 219 கி.மீ தெற்கே டிரேக் பாஸேஜில் உள்நாட்டு நேரப்படி 12:58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 என்று பதிவாகி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கடலில் பேரலைகள் எழுந்துள்ளன. இதனால் சுனாமி எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தை சுற்றி 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் வார்னிங் செய்துள்ளது.