ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 31 பேர் பலி!
13 Apr,2025
உக்ரைன் நாட்டின் சுமி நகரில் ரஷ்யா ஏவுகணை குண்டுகளை வீசித் தாக்கியதில் 31 பேர் உயிரிழந்துள்ளார். 83 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டுகளை வீசியதாக உக்ரைன் நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். குண்டுகளை வீசி அப்பாவி மக்களை ரஷ்யா கொன்று குவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"சீனாவை இழுத்துவிட்ட புதின்! மாபெரும் போர் அபாயம்- இடையில் சம்பந்தமே இல்லாமல் சிக்கிய இந்திய நிறுவனம்" ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் உக்ரைன் - ரஷ்யா இருவருமே மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் வடகிழக்கு நகரமான சுமி நகரின் மீது ரஷ்யா இன்று பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் சுமி நகரத்தில் இன்று காலை 10:15 மணியளவில் ஞாயிறு குறுத்தோலை நிகழ்வைக் கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது, நகரின் மையப்பகுதியை இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 83 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். "அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கும் அயோக்கியர்களால் மட்டுமே இதுபோன்று செயல்பட முடியும்" என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று, இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குசும் என்ற மருந்து நிறுவனம், இந்திய தொழில் அதிபர் ராஜீவ் குப்தாவிற்கு சொந்தமானது. உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில் ரஷ்யா அங்கு தாக்குதல் நடத்தியது.