சீனாவில் வசிக்கும் மக்களில் 50 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதோடு சீனாவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பூங்காக்கள் முடப்பட்டுள்ளதோடு, ரயில், விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்படி திடீரென்று லாக்டவுன் போன்ற சூழல் அங்கு ஏற்பட்டதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
அது பற்றிய விபரம் வருமாறு: நம் நாட்டின் அண்டை நாடாக சீனா உள்ளது. மொத்த உலகத்தையும் முடக்கிப்போட்ட கொரோனா வைரஸ் இங்கிருந்து தான் பரவியது. இதனால் உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம் என்று ஒவ்வொரு நாடுகளின் அரசும் அறிவுரை வழங்கியது. இதற்கு சீனாவும் விதிவிலக்கல்ல. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து உலக நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இப்படியான சூழலில் தான் மீண்டும் லாக்டவுன் போன்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது சீனா. இதற்கு என்ன காரணம்? என்பது பற்றி இங்கு பார்ப்போம். சீனா.. அடிக்கடி இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்று. இந்நிலையில் தான் தற்போது சீனாவில் சூறைக்காற்று என்பது அதிவேகமாக வீச தொடங்கி உள்ளது.
சீனாவின் வடக்கு மாகாணங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. சீனாவின் பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது.
இந்த காற்றில் பேனர்கள் தூக்கி வீசப்படுகின்றன.
மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுகின்றன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று முதல் வீச தொடங்கிய இந்த சூறைக்காற்று நாளை வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறைக்காற்று காரணமாக பெய்ஜிங்கில் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங் உள்பட பல மாகாணங்களில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் மொத்தம் 2 கோடியே 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இப்படியான சூழலில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல வடக்கு மாகாணங்களில் 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஏனென்றால் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். இது 50 கிலோவுக்கு குறைவான மக்களை தூக்கி செல்லும்.
எனவே பொதுமக்கள் பத்திரமாக வீடுகளில் இருக்க வேண்டும் என்று சீனா சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீனாவின் அரசு செய்தி நிறுவனம் சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சீனாவில் பல மாகாணங்களில் மணிக்கு 150 கிலோமீட்டர் (93 மைல்) வேகத்தில் குளிர் காற்று வீச தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கிய இந்த சூறைக்காற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) சீனாவின் பல மாகாணங்களை பாதிக்கலாம். மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். 50 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள மக்கள் இந்த காற்றில் அடித்து செல்லப்படலாம். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சீனாவில் தற்போது வீசும் குளிர் நிறைந்த சூறைக்காற்றால் அங்கு வெப்பநிலை என்பது மளமளவென சரிந்து வருகிறது. அதன்படி இன்று முதல் அடுத்த 24 மணிநேரத்தில் சீனாவின் வெப்பநிலை என்பது 14 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதோடு சூறைக்காற்றின் வேகம் என்பது கடந்த 1951 ஏப்ரல் மாதம் வீசியதை விட பலமாக இருக்கலாம். இதனால் சூறைக்காற்றுக்கான ஆரஞ்சு அலர்ட் என்பது சீனாவுக்கு
விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த காலக்கட்டத்தில் மங்கோலியாவில் வீசும் மணல், தூசி புயல்களின் தாக்கம் சீனாவில் எதிரொலிக்கும். ஆனால் இப்போது முதல் முறையாக இந்த அதிதீவிர எச்சரிக்கை என்பது விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தெற்கு சீனாவில் இந்த முறை ஆலங்கட்டி மழை என்பது கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.