காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 3 நாட்களில் 700க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!
21 Mar,2025
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் 700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். புதன் கிழமை நள்ளிரவு நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போர் நிறுத்தத்தை இஸ்ரேல் நிறுத்திய நிலையில், கடந்த செவ்வாய் கிழமை மட்டும் 400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கான புதிய ஒப்பந்தத்தை ஹமாஸ் நிராகரித்ததே இதற்கு காரணம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தாக்குதலின் அடுத்த கட்டமாக இஸ்ரேலிய தரைப்படையினர் முன்னேறி வருகிறார்கள். போர் நிறுத்தத்தின் போது உணவு, எரிபொருள், மனிதாபிமான உதவிகளை அனுமதித்த நிலையில், அவற்றை இஸ்ரேல் நிறுத்தி விட்டதால் காசாவில் நிலைமை சிக்கலாகி உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் தலைநகரை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் வான்வெளி தாக்குதல் நடத்தி உள்ளனர். எனினும் அந்த ராக்கெட்களை வானில் இடைமறித்து இஸ்ரேல் படைகள் தகர்த்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.