ஈரானுக்கு எதிராக திரும்பிய ரஷ்யா?
20 Mar,2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று தொலைபேசியில் பேசினர். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். டிரம்பின் இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் விளாடிமிர் புதின் மனம் மாறி தனது நட்பு நாடான ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளாரா? என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா சார்பில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகளுடன்
பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது. ஏற்னகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார். இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து டொனால்ட் டிரம்ப், விளாடிமிர் புதினிடம் தொலைபேசியில் பேசினார். இருவரும் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக விவாதித்தனர். இந்த வேளையில் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சில முக்கிய டிமாண்டுகளை டொனால்ட் டிரம்பிடம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன் போரால் அமெரிக்கா - ரஷ்யா உறவில் விரிசல் உள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனை மறந்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது பற்றி இருவரும் பேசி உள்ளனர். இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின் இடையேயான இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் அறிக்கை வெளியிட்டார். அதில் இருதலைவர்களும் விவாதித்தது
பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த அறிக்கையில், ‛‛அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் உக்ரைனில் அமைதி நிலவும் வகையில் போர் நிறுத்தத்தின் அவசியம் பற்றி விவாதித்தனர். நீண்டகாலமாக நடக்கும் இந்த மோதல் அமைதியாக முடிவடைய வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதன் அவசியம் பற்றி பேசினர். இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் செலவிடும் செல்வத்தை சொந்த மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று டிரம்ப் கூறினார். இந்த மோதல் தொடங்கி இருக்க கூடாது என்று தெரிவித்தார். முழு போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர அமைதி உள்ளிட்டவை பற்றிய பேச்சுவார்த்தை தொடங்க இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடங்கும். எதிர்கால அமைதி மற்றும் மோதல் தடுப்பு பற்றி விவாதித்தனர். மத்திய கிழக்கு நாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆயுதங்கள் குவிக்கப்படுவதை நிறுத்துவது பற்றி வவாதிக்கப்பட்டது. இஸ்ரேலை அழிக்கும் வகையில் ஈரான் ஒருபோதும் செயல்படக்கூடாது என்று இருதலைவர்களும் கருத்தை பரிமாறி கொண்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் உக்ரைன் - ரஷ்யா மட்டுமின்றி இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலை நிறுத்த இருதலைவர்களும் பேசி உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையே நட்பு உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. இப்படியான சூழலில் தான் இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் என்பது அதிகரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால் ஈரான் டென்ஷனாகி லெபனானின் ஹெஸ்புல்லாவை வைத்து இஸ்ரேலை தாக்கியது. பதிலுக்கு இஸ்ரேல் ஹெஸ்புல்லா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இப்போது நேரடியாக இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் என்பது வலுத்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹமாஸ், ஹெஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் ஆதரவு அமைப்புகளின் படையை சேர்ந்த ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் ஈரான் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பதாக கூறி வருகிறது. இப்படியான சூழலில் தான் இஸ்ரேலை அழிக்கும் வகையிலான செயலில் ஈரான் ஈடுபடக்கூடாது என்று இருதலைவர்களும் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு போன்காலில் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எடுக்க தயாராகி விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் அது இஸ்ரேலுக்கு ஹேப்பி செய்தியாக அமையும். ஏனென்றால் மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால மோதல் என்பது உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.