எல்லாமே நல்லாவே நடந்தது.! மீண்டும் பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்
19 Mar,2025
விண்வெளியில் 280 நாட்களுக்கும் மேலாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் ( Sunita Williams) இன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார். திட்டமிட்டபடி அதிகாலை 3.27 மணிக்கு இந்திய நேரப்படி அந்த விண்கலம் புளோரிடா கடலில் இறங்கிய நிலையில் உடனடியாக மீட்பு வீரர்கள் விண்வெளி வீரர்களை அழைத்துச் சென்றனர். போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் 8 நாள் பயணமாக கடந்த ஜூலை மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூட்ச் வில்மோர் ஆகியோர் சென்றனர்.
ஆனால் ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்ப தாமதம் ஏற்பட்டது. அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அவர்கள் சென்ற ஸ்டார் லைனர் மட்டும் வீரர்கள் இன்றி பூமி திரும்பியது. இந்நிலையில் நீண்ட தாமதத்திற்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்தடைந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அவர்களை மீட்க விண்வெளிக்குச் சென்றது. அந்த விண்கலத்துடன் நான்கு வீரர்கள் சென்ற நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து இந்திய நேரப்படி நேற்று காலை 10:30 மணிக்கு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நான்கு வீரர்களுடன் பூமி திரும்பியது. 17 மணி நேரத்திற்கு பிறகு இந்திய நேரப்படி இன்று காலை 3:15 மணிக்கு பூமியின் வளிமண்டலத்திற்குள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 4 வீரர்களுடன் நுழைந்தது. அப்போது சுமார் 1600 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை ஏற்பட்டது. மேலும் விண்வெளி வீரர்கள் அதிக அளவு அழுத்தத்தை உணர்ந்தனர்.
தொடர்ந்து 3.20 மணிக்கு பூமியை நெருங்கிய டிராகன் விண்கலத்தின் முதல் இரண்டு பாராசூட்கள் வெற்றிகரமாக விரிந்தது. அப்போது நாசாவில் விஞ்ஞானிகள் கைதட்டி உற்சாகமாக வீரர்களை வரவேற்றனார். தொடர்ந்து அடுத்த கட்டமாக நான்கு பெரிய பாராசூட்டுகள் விரிந்தது. சிறிது நேரத்திலேயே ஃப்ளோரிடா கடலில் டிராகன் விண்கலம் எந்த விதமான பிரச்சினையும் இன்றி இறங்கியது. சிறிது நேரத்திற்கு பிறகு அமெரிக்க கடற்படை மற்றும் நாசா மீட்பு படை வீரர்கள் விண்கலத்தில் இருந்த வீரர்களை மீட்டனர்.