குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்! காசாவில் 100+ பேர் பலி
18 Mar,2025
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களாகப் போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், அதை மீறி காசா மீது ஹமாஸ் மிக பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இன்று அதிகாலை காசா மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்த நிலையில், இதில் 100+ மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 2023 முதலே மோதல் போர் நிலவி வந்தது. பெரும் முயற்சிக்கு பிறகே கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும்,
அது பலவீனமான போர் நிறுத்த ஒப்பந்தம் என்றும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடங்கும் என்றுமே பலரும் எச்சரித்து வந்தனர். 100 பேர் உயிரிழப்பு இந்தச் சூழலில் தான் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. காசாவின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சமீப காலங்களிலே நடந்ததிலேயே மிக பெரிய தாக்குதல் இதுவாகும். புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பல குழந்தைகளும் கூட உயிரிழந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் இந்தப் பக்கம் தாக்குதலை நடத்தும் நிலையில், அங்கு அமெரிக்கா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்குத் தெரியும் அதாவது தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே காசா மீது முழு வீச்சில் இந்தத் தாக்குதல் இஸ்ரேல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி என யாராக இருந்தாலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
பிரச்சினை என்ன கடந்த 2023ல் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது பலரைப் பணய கைதிகளாகப் பிடித்துச் சென்றது. அப்படிப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் சுமார் 59 பேர் இன்னும் ஹமாஸ் வசமே உள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் அவர்களை ஹமாஸ் விடுவிக்காத நிலையில், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பல முறை வலியுறுத்திய பிறகும் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாலேயே தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் குற்றம் சாட்டியது. அதேநேரம் இஸ்ரேல் ஒருதலைபட்சமாகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாலேயே பணய கைதிகளை விடுவிக்கவில்லை என்று ஹமாஸ் தரப்பு கூறுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் கடந்த ஜனவரி 19ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சூழலில், முதற்கட்டமாக 33 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்குப் பதிலாக சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டன. எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டு இருந்த நிலையில், திடீரென ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு இணங்க மறுப்பதாகச் சொல்லி காசாவுக்கு செல்லும் உதவி பொருட்களின் சப்ளையை இஸ்ரேல் நிறுத்தியது மறுபுறம் போருக்கு நிரந்தர முடிவு மற்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக விலகுவது ஆகிய நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுப்பதே தாமதத்திற்குக் காரணம் என ஹமாஸ் பதிலடி கொடுத்திருந்தது.
திடீர் தாக்குதல் இரு தரப்பும் இப்படி மாறி மாறி கூறியதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் இன்று இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸின் ராணுவ தளங்களைக் குறிவைத்தே தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. இருப்பினும், காசா நகர் மற்றும் டெய்ர் அல்-பலாவில் உள்ள பல குடியிருப்பு கட்டிடங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாலஸ்தீன மருத்துவர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலால் சுமார் 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் காசா பகுதியில் சுகாதார கட்டமைப்பு ஏற்கனவே மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.