புழுதிப்புயல், சூறாவளி, காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு; லட்சக்கணக்கானோர் பாதிப்பு
17 Mar,2025
அமெரிக்காவை ஒரேநேரத்தில் பந்தாடிய சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் புழுதிப்புயல், சூறாவளி, பனிபுயல்கள் ஏற்படுவது வழக்கம். தற்போது அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மோசமான வானிலை காணப்படுகிறது. இந்நிலையில், மிசோரி மாகாணம், செயின்ட் லூயிஸ் பகுதிகளில் கடந்த வௌ்ளிக்கிழமை இரவு பயங்கர சுழல் காற்று வீசியது. இதில் பள்ளி உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த சுழல் காற்று டெக்சாஸ் நோக்கி அமெரிக்காவின் தெற்கு பகுதிக்கு நகரும், அப்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெக்சாஸ் மாகாணம் பன்ஹாண்டின் அமரில்லோ கவுண்டியில் வெள்ளிக்கிழமை பயங்கர புழுதி புயல் வீசியது. கண்ணை மறைக்கும் அளவுக்கு வானுயர வீசிய புழுதி புயல் காரணமாக சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்துகளில் 5 பேர் பலியானதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புழுதி புயல் காரணமாக ஒக்லஹோமா, மிசோரி, டெக்சாஸ், நியூ மெக்சிகோ, கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் அங்குள்ள ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. வீடுகளில் சிக்சி உள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. பல மாகாணங்களில் நேற்றும் இந்த பாதிப்புகள் தொடர்ந்தன. அமெரிக்கா முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.