மத்திய கிழக்கில் நேரடியாக இறங்கிய அமெரிக்கா! ஹவுதி படை மீது கொடூர தாக்குதல்
16 Mar,2025
கடந்த சில காலமாகவே மத்திய கிழக்கில் மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இத்தனை காலம் அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலுக்கு உதவி செய்து வந்த போதிலும், நேரடியாகத் தாக்குதலில் இறங்கியது இல்லை. இதற்கிடையே முதல்முறையாக திடீரென ஏமனில் உள்ள ஹவுதி படை மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வந்தது. இஸ்ரேல்- ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்-
ஹிஸ்புல்லா இடையேயும் தாக்குதல் நடந்தது. இடையில் சில காலம் ஹவுதி படைகளும் கூட தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழலே நிலவி வந்தது. அமெரிக்காவின் பெருமுயற்சிக்கு பிறகே அங்குச் சற்று அமைதி திரும்பியது. ஹவுதி மீது தாக்குதல் இதற்கிடையே இப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில், ஏமனில் உள்ள ஹவுதி படை மீது நேரடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹவுதிக்கள் மீது நடைபெறும் முதல் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலில் குறைந்தது 21 ஹவதிக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹவுதிக்கள் என்பது ஏமன் நாட்டில் இயங்கும் கிளர்ச்சியாளர்கள் ஆகும். இவர்களுக்கு ஈரானின் ஆதரவு முழுமையாக இருக்கிறது. காசா போர் காலகட்டத்தில் இஸ்ரேல் மற்றும் செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்களைக் குறிவைத்து, இந்த ஹவுதிக்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குழு மீது தான் இப்போது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
பெரிய தாக்குதல் ஏமன் தலைநகரான சனா இப்போது ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு மொத்தம் 3 இடங்களில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், குடியிருப்பில் இருந்து கடுமையான புகை மூட்டங்கள் எழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர ஹவுதிக்களின் கோட்டையான ஏமனின் வடக்கு சாடா பிராந்தியத்திலும் தாக்குதல்கள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. 21 பேர் பலி இது தொடர்பாக ஹவதி தரப்பில் கூறுகையில், "இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 9 பேர் காயமடைந்தனர். அவர்களின் காயம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதேபோல சாடா பிராந்தியத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.. பலர் காயமடைந்தனர். இதை அமெரிக்கப் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவின் மிருகத்தனமான தாக்குதலாகும். மேலும், சனாவில் மற்றொரு குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன அமெரிக்காவும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. கப்பல்களில் இருந்து ஆயுதங்களோடு விமானங்கள் புறப்படும் படத்தையும் கட்டிடம் ஒன்றை விமானம் தாக்கி அழிக்கும் படத்தையும் அமெரிக்கா பகிர்ந்துள்ளது. அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கவும், எதிரிகளைத் தடுக்கவும், சுதந்திரத்தை மீட்டெடுக்கவும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்து இது குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே டிரம்பும் இந்தத் தாக்குதல் குறித்து வெளிப்படையாக எச்சரித்துள்ளார். செங்கடலில் வணிக கப்பல்களை ஹவுதிக்கள் தாக்குவதை குறிப்பிட்ட டிரம்ப், "அப்பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கும். மேலும், ஹவுதி படைக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவையும் உடனடியாக நிறுத்த வேண்டும். நரகத்தைப் பார்ப்பீர்கள் அனைத்து ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. உங்கள் நேரம் முடிந்துவிட்டது. உடனே உங்கள் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால். நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத நரகத்தைப் பார்ப்பீர்கள். அமெரிக்க மக்களையோ, அவர்களின் அதிபரையோ... அல்லது உலகளாவிய வர்த்தக ரூட்களையோ அச்சுறுத்த வேண்டாம். நீங்கள் அப்படிச் செய்தால் அமெரிக்கா உங்களை சும்மா விடாது" என பதிவிட்டுள்ளார். அதேநேரம் அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என்றும் இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஹவுதிக்களும் பதிலடி கொடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.