ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் கொன்றுவிட்டதாக பலூச் லிபரேஷன் ஆர்மி அமைப்பு அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது. அதோடு பலூச் விடுதலை அமைப்பின் கோரிக்கையை ஏற்காமல் காலதாமதம் செய்ததால் 214 பேரையும் தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணம் தான் பலுசிஸ்தான். இந்த மாகாணம் என்பது ஆப்கானிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்தாலும் கூட இந்த பலூச் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறி கொள்வது இல்லை. ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு தனி நாடு கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். மேலும் பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பிரிவினைவாத படைகள் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army). இவர்கள் பாகிஸ்தானுடன் நீண்டகாலமாக மோதி வருகின்றனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் கனிமவளங்கள் கொட்டி கிடக்கின்றன.
இதனை பாகிஸ்தான், சீனாவும் அபகரித்து வருகிறது. இதற்கு தற்போது பலூச் விடுதலை ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதோடு பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டு வெடிப்புகளை பலூச் விடுதலை ராணுவத்தினர் மேற்கொண்டனர். இதனால் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பலூச் விடுதலை ராணுவம் இடையே மோதல் என்பது வெடித்தது. இந்த மோதலின் ஒருபகுதியாக குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கி ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 11ம் தேதி சென்று கொண்டிருந்தது.
பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது பலூச் விடுதலை படையினர் வெடிவைத்து ரயிலை தடம்புரள செய்தனர். அப்போது ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பலூச் விடுதலை ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 30 பேர் வரை சுட்டு கொல்லப்பட்டனர். அதோடு 500க்கும் மேற்பட்டவர்களை பலூச் விடுதலை ராணுவத்தின் பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். Powered By பாகிஸ்தான் ராணுவம் முழுவீச்சில் களமிறங்கியது.
பணயக்கைதிகளை மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரமாக செயல்பட்டது. 364 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 200க்கும் அதிகமானவர்கள் பலூச் விடுதலை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் பணயக்கைதிகளாக இருந்தனர். இந்நிலையில் தான் தற்போது பலூச் விடுதலை ராணுவம் சார்பில் ஷாக் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜியந்த் பலுச் தான் திடுக்கிட வைக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‛‛ஜாஃபர் ரயில் கடத்தலில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 214 பணயக்கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பலூச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள 48 மணி நேரம் காலக்கெடு வழங்கியது. இது பணயக்கைதிகளின் உயிரை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வழக்கம்போல் பிடிவாதம் மற்றும் ஆணவப்போக்கை கடைப்பிடித்தது. பேச்சுவார்த்தையை தவிர்த்ததோடு, கள எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறிவிட்டது. இந்த பிடிவாதத்தின் விளைவாக 214 பணயக்கைதிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
நாங்கள் எப்போதும் சட்டத்தின் படி தான் நடப்போம். ஆனால் பாகிஸ்தானின் பிடிவாதம் தான் எங்களை இப்படி செய்ய கட்டாயப்படுத்தியது. கைதிகள் பரிமாற்றத்திற்காக பாகிஸ்தானுக்கு 48 மணி நேரம் காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனால் அந்த காலக்கெடுவை பயன்படுத்த பாகிஸ்தான் தவறி விட்டது. இதுதான் இவர்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இது மொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் தூக்கிலிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனால் பாகிஸ்தான் அதனை ஏற்கவில்லை. பணயக்கைதிகள் அனைவரும் உயிரோடு தான் இருப்பதாக பாகிஸ்தான் நம்புகிறது. பாகிஸ்தான் தரப்பில் பணயக்கைதிகள் யாரும் கொல்லப்படவில்லை என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் ராணவத்தின் செய்தி தொடர்பாளர் அகமது ஷரிப் சவுத்ரி கூறுகையில், ‛‛354 பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மற்ற பணயக்கைதிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 21 ராணுவ வீரர்கள் 3 ரயில்வே ஊழியர்கள், 5 பயணிகள் அடங்குவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இப்படி கூற பலூச் விடுதலை ராணுவம் பணயக்கைதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்று 214 பேரையும் தூக்கிலிட்டு கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் உண்மை என்ன? என்பது பற்றிய கேள்வியும் எழுந்துள்ளது.
l