போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த மாதம் 28ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டினார். உதவியை நிறுத்தியதால் உக்ரைன் பணிந்தது. இதையடுத்து இன்று 2வது கட்டமாக இன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதோடு உக்ரைனுக்கு உதவிகளை வழங்கின. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து வந்தது உக்ரைன். இதற்கிடையே தான் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் கடந்த ஜனவரி 20ல் பதவியேற்றார். அதன்பிறகு நிலைமை மாற தொடங்கியது.
போரை நிறுத்துவதில் டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அதேபோல் அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவுதி அரேபியாவில் பேசினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி வெள்ளைமாளிகையில் வைத்து பேசினர். அதன்பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கடும் மோதல் ஏற்பட்டது.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அதிபர் டிரம்ப் ஆகியோரின் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். ரஷ்யாவை குற்றம்சாட்டும் நோக்கத்தில் ஜெலன்ஸ்கி இருந்தார். மேலும் இந்த போரில் அமெரிக்கா, உக்ரைனுக்கு உதவவில்லை. உக்ரைன் தனியாக போரை சமாளித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கொலைகாரர் என்று கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேரலையில் இருநாட்டு தலைவர்களும் மோதிக்கொண்டனர். கோபத்தின் உச்சிக்கு போன டிரம்ப், உக்ரைன் அதிபரையும் அவரது குழுவினரையும் வெள்ளை மாளிகையில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்.
அதன்பிறகு ஜெலன்ஸ்கியை, டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்தினார். அமெரிக்கா ஆதரவின்றி உக்ரைனால் ரஷ்யாவின் போரை சமாளிக்க முடியாது. இதனால் வேறு வழியின்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பணிந்தார். அதோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தின்படி அவருக்கு கீழ் பணியாற்ற தயாராக உள்ளதாக அறிவித்தார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்புக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து அதே வேளையில் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ மற்றும் நிதியுதவிக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா எடுக்க அனுமதிக்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த உக்ரைன் பின்னர் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 2 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார். இதனால் கோபமடைந்த ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓவல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது. இந்த நிலையில் உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.
இன்று சவுதி அரேபியாவில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜெட்டாவில் வைத்து நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி 18ம் தேதி நடந்த போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த முறை அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தை ஜெட்டா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா மற்றும் உக்ரைன் சார்பில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்கிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைனுக்கு வழங்கிய உதவிக்கு கைமாறாக அந்த நாட்டின் கனிமவளத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அதேபோல் ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது மற்றும் உக்ரைனின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக அமெரிக்கா உறுதியளிக்கும் வகையில் ஒப்பந்தம் என்பது கையெழுத்தாக உள்ளது. முன்னதாக இந்த பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்றைய தினமே சவுதி அரேபியா சென்றார். அங்கு அவர் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். இந்த மீட்டிங் நல்லபடியாக முடிந்தது என்று ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் டிமைட்ரோ லைட்வின் தெரிவித்தார். அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் 2 மணிநேரம் சந்தித்து பேசினர். இந்த மீட்டிங்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் பங்கேற்றார்.