உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா: 14 பேர் பலி; 30 பேர் படுகாயம்
                  
                     09 Mar,2025
                  
                  
                      
					  
                     
						
	 
	 அமெரிக்கா தனது உதவியை நிறுத்திய நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியதால் உக்ரைனில் 14 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் கிழக்குப் பகுதியான டோனெஸ்டை குறிவைத்து ரஷ்யப் படைகள் இரண்டு தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஐந்து கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து குழந்தைகள் உட்பட 30 பேர் காயமடைந்தனர்.
	 
	அந்தப் பகுதியில் மற்றொரு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன, ஆனால் அது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகை சந்திப்பு மோதலில் முடிந்தனர். அதன்பின் அரிதான கனிம வளங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் உக்ரைன் அதிபர் நாடு திரும்பினார். இதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு அளித்து வந்த உதவியை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்கு உக்ரைன் அதிபர் உடன்படவில்லை.
	 
	நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து கோரிக்கையில் இருந்து உக்ரைன் தன்னை விடுவித்துக் கொண்டு, போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், டிரம்பின் முன்மொழிவை ஜெலென்ஸ்கி ஏற்கத் தயாராக இல்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், இறுதியில் டிரம்பின் நிபந்தனைகளை ஏற்க ஜெலென்ஸ்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.