கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது உக்ரைனுக்கான புலனாய்வு தகவல் பகிர்வு மற்றும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலால் 20 பேர் உக்ரைனில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேட்டோ மற்றும் டான்பாஸ் பகுதிகளை காரணம் காட்டி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ராணுவம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் போரை தொடங்கிய நிலையில், 3 ஆண்டுகள் முடிந்து 4ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள போதிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீது உடனான ரஷ்யாவின் போரால் உக்ரைன் நாட்டில் இருந்து சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். இதனால் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. குறிப்பாக ஐநா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போதே தான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் உக்ரைன் போரை நிறுத்துவேன் என ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட குழுவை அமைத்தது. ஆனால் போரால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைன் தரப்பில் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த 19ஆம் தேதி துபாயில் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சரும், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சரும் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உக்ரைன் தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.
அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பை கேட்காமலேயே நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகளை நிராகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார் ஜெலன்ஸ்கி. இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெலன்ஸ்கி அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்த, அதற்கு முடியாது என்றார். மேலும் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா உறுதியளித்தால் மட்டுமே கையெழுத்திடுவேன் என ஜெலன்ஸ்கி கூறினார்.
இதனால் நேரடியாக இரு தரப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜெலன்ஸ்கி அங்கிருந்து வெளியேறிய நிலையில் அமெரிக்கா உக்ரைன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து உக்ரேனுக்கான ராணுவ உதவி மற்றும் புலனாய்வு தகவல் பகிர்வை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. தொடர்ந்து அமெரிக்காவுடன் இணக்கமாக செல்வதாக ஜெலன்ஸ்இ அறிவித்தாலும் அமெரிக்கா ஒப்புக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகள் உக்கரேனுக்கு உதவுவதாக அறிவித்துள்ளன.
இதற்கிடையே அமெரிக்கா கைவிட்டதால் உக்ரைன் மீது மீண்டும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. கிழக்கு பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில் ரஷ்ய படைகள் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தின. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், நிர்வாக கட்டிடங்கள், கார்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவலின் படி மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதுக்கு அடுத்து வந்த தகவல் படி இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஏராளமான ஒரு பாதிக்கப்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஜெலன்ஸ்கி கூறியிருந்தாலும் அமெரிக்கா கைவிட்டு நிலையில் இந்த இரவு நேர தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.