தீப்பிடித்த விமானம்: 80 பயணிகளும் உயிர் தப்பினர்
19 Feb,2025
கனடாவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று பனிக்காற்றில் சிக்கி ஓடுபாதையில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 80 பயணிகள் உயிர் தப்பினர். கனடா நாட்டின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு, மினியாபோலிஸில் இருந்து டொராண்டோவுக்கு 76 பயணிகளை ஏற்றிக் கொண்டு ‘டெல்டா’ ஏர் லைன்ஸ் விமானம் வந்தது. பைலட் உள்பட இந்த விமானத்தில் மொத்தம் 80 பேர் இருந்தனர். இந்த விமானம் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 2.15 மணிக்கு தரையிறங்க முயன்றது. ஆனால் விமான நிலையத்தின் ஓடுபாதையில் படிந்திருந்த பனிப்பொழிவு காரணமாகவும், 65 கிமீ வேகத்தில் வீசிய பனிக்காற்று காரணமாகவும் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மேலும் பெரும் புகைமண்டலமாக காட்சியளித்தது. விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் பீதியடைந்தனர் இதையடுத்து விமானநிலையத்தில் உள்ள மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டனர். மீட்புக் குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. 18 பயணிகள் காயமடைந்ததால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன.