கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விமானம் விபத்து: 80 பயணிகளின் நிலை?
18 Feb,2025
கனடாவில் தரையிறங்கியபோது விமானம் கவிழ்ந்து விபத்து: 18பேர் படுகாயம் அடைந்தனர். பனிப்பொழிவு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு 76 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் வந்தது. டொரன்டோ நகரில் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்து தீப்பிடித்தது.
அதில் இருந்த 80 பேரில் 18 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் உரிய பரிசோதனைக்குப் பிறகு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கு பனிப்பொழிவு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்து குறித்து கனடா மற்றும் அமெரிக்காவில் விசாரணைகளுக்காக டெல்டா ஏர் லைன்ஸ் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. “கனடாவில், தனிநபர்கள் 1-866-629-4775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவில், இருந்து 1-800-997-5454 என்ற எண்ணைப் பயன்படுத்தி தங்களை தொடர்பு கொள்ளலாம்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.