காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் அமெரிக்கானா என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று கேள்வி கேட்கும் வகையில் எகிப்து மாஸ்டர் பிளானை உருவாக்கி வருகிறது. இது ஐரோப்பா மற்றும் இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் உள்ளதால் டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது காசா போர் பற்றி இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு என்பது காசா மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கு காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியது தான் காரணம்.
அதாவது , ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். இஸ்ரேல் உடனான போரால் காசா அழிவின் விளிம்பில் உள்ளது. மீண்டும் அங்கு காசா மக்களை வசிக்க சொல்வது மோதலுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா காசாவை கைப்பற்றி மேம்படுத்த உள்ளது. கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன்பிறகு அனைத்து மக்களும் அங்கு வாழலாம். இந்த பணிக்காக காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும். அவர்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். Powered By மேலும் அண்டை நாடுகளாக உள்ள எகிப்து,
ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் காசாவில் இருந்து வெளியேறும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லாவை வெள்ளை மாளிகையில் அழைத்து டொனால்ட் டிரம்ப் பேசினார். ஆனால் எகிப்தும், ஜோர்டானும் ஒப்புக்கொள்ளவில்லை. காசா மக்களை வெளியேற்றாமல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இதை கருத்தை தான் எகிப்து, சவுதி அரேபியா உள்பட பல இஸ்லாமிய நாடுகள் கூறி வருகின்றனர்.
இது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் கூட காசாவை கைப்பற்றுவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். விரைவில் இஸ்ரேல் உதவியுடன் காசாவில் இருந்து அந்த நாட்டு மக்களை அமெரிக்கா வெளியேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக எகிப்து வெடித்து கிளம்பி உள்ளது. அதோடு காசாவை அமெரிக்கா கைப்பற்றுவதை எதிர்ப்பதோடு, காசாவில் மறுபுனரமைப்பு பணி மேற்கொள்ள எகிப்து மாஸ்டர் பிளானை உருவாக்கி வருகிறது. இதுதொடர்பாக எகிப்து நாட்டின் அதிகாரப்பூர்வ நாளிதழ் அல் அஷ்ரம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் பாதுகாக்கப்பட்ட ஏரியாவை உருவாக்க வேண்டும்.
அங்கு பாலஸ்தீனியர்களை வாழ வைத்து எகிப்து மற்றும் சர்வேதச கட்டுமான நிறுவனங்கள் கட்டட கழிவுகளை அகற்றி புதிய கட்டுமானங்களுடன் காசாவை மறுஉருவாக்கம் செய்யும். இதுதொடர்பாக எகிப்து அரசு ஐரோப்பா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 எகிப்து அதிகாரிகள் பிற நாடுகளின் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் காசாவை மறுஉருவாக்கம் செய்வதற்கான நிதி உதவி பற்றி விவாதித்து வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை என்பது தற்போது தொடக்க நிலையில் தான் உள்ளது. இது அமெரிக்கா மற்றும் அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எகிப்தின் இந்த செயல் என்பது டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலியை உருவாக்கி உள்ளது. மேலும் எகிப்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இஸ்ரேல் -
காசா இடையேயான பிரச்சனை வந்ததில் இருந்து ஏராளமான பாலஸ்தீனியர்கள், எகிப்தில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இப்போது பல லட்சம் பாலஸ்தீனியர்கள் எகிப்தில் வசித்து வருகின்றனர். தற்போது அமெரிக்கா மீண்டும் காசாவில் உள்ளவர்களை எகிப்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது. இது எகிப்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தான் அமெரிக்காவின் முடிவுக்கு எகிப்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளதோடு, பிற நாடுகளுடன் சேர்ந்து காசாவை புதிதாக கட்டமைக்க முடிவு செய்துள்ளது. Advertisement அதேவேளையில் எகிப்தின் இந்த பிளான் சாத்தியமாகுமா?
என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் எகிப்தின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. அந்த நாட்டுக்கே ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை அமெரிக்கா தான் வழங்கி வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவை எதிர்த்து பிற நாடுகளின் உதவியுடன் காசாவை மேம்படுத்த எகிப்து முடிவு செய்துள்ளது. இதனால் எகிப்தின் இந்த முயற்சி வெற்றிகரமாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.