ஹமாஸுக்கு நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை
12 Feb,2025
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை(15) மதியத்துக்குள் ஹமாஸ் தரப்பினர் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறு அறிவித்தல் கிடைக்கும் வரை பணயக்கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன், பணயக் கைதிகளை குறித்த காலபகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் ஹமாஸூக்கு எதிராகத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தரப்பினரால் 76 பணயக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர், சகல பணயக் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பணயக்கைதிகளின் விடுதலை தொடர்பில் எச்சரி்க்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.